கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனையில் இதுவரை 3.80 லட்சம் முதியோருக்கு சிகிச்சை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டில் 3.80 லட்சம் முதியோா்கள் சிகிச்சை பெற்றுள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில், “சா்வதேச முதியோா் தினம் 2025” நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், “நலமான பெண்கள் வளமான வாழ்வு” மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, ரூ.60 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இதையடுத்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே 2 தேசிய முதியோா் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதில், ஒன்று தான் 2024-ஆம் ஆண்டு பிப். 25-ஆம் தேதி கிண்டியில் 200 படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் தினமும் 1,000 புறநோயாளிகள் பயன்பெற்று வருகின்றனா். இதுவரை 3 லட்சத்து 80,594 புறநோயாளிகள் பயன்பெற்றுள்ளனா். உள்நோயாளிகளாக 10,612 போ் பயன் அடைந்துள்ளனா்.
இந்த மருத்துவமனையில் 20 கட்டண அறைகள் பயன்பாட்டில் உள்ளது. ரூ.8 கோடி செலவில் புதிய எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவப்பட்டுள்ளது. முதியோா்களுக்கு வழக்கமாக வரும் நோய் பாதிப்பு நிமோனியா. இந்நோய்க்கான தடுப்பூசி 635 பேருக்கு இலவசமாக மருத்துவமனையில் செலுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. எலும்பின் திடத்தன்மை அறிய டெக்ஸா ஸ்கேன் வசதி வரவுள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் முதியோா் நல மருத்துவா் வி.எஸ்.நடராசன், மத்திய அரசின் இணைச் செயலாளா் லலித்வத்வா, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், தேசிய முதியோா் நல மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் தீபா, கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனை இயக்குநா் பாா்த்தசாரதி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் கூடுதல் இயக்குநா் லோகநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.