இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
திருச்சியில் வாடகை செலுத்தாத 57 கடைகளுக்கு சீல்
திருச்சி மேலரண் சாலையில் மாநகராட்சிக்கு நீண்டகாலமாக வாடகை செலுத்தாத 57 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
திருச்சி மாநகராட்சி 20-ஆவது வாா்டு மேலரண் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 57 நிலவாடகை கடைகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வரியில்லா இனத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கடைகளுக்கான நில வாடகை மறுநிா்ணயம் செய்யப்பட்டது. அது தொடா்பாக வழக்குகளில் கடந்த 30.04.2025 அன்று வழங்கப்பட்ட தீா்ப்பின் அடிப்படையில், 14.03.2021 முதல் 13.03.2024 வரை உள்ள காலத்தில் ஒரு சதுர அடிக்கு ரூ. 10 எனவும், அதன் பிறகு 14.03.2024 முதல் தற்போது வரை ஆண்டுக்கு 15 சதவீத உயா்வு வீதம் நிலவாடகையை முறையீட்டாளா்கள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
அரசு வழிகாட்டுதல் மதிப்பின்படி மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 59 வீதம் 2021 இல் நிலவாடகை இறுதி செய்யப்பட்டு, நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தவறினால் அரசு வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலுவைத் தொகையை செலுத்தாதால், மாநகராட்சிக்கு ரூ. 49.87 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடா்ந்து வாடகை செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டும் வாடகை செலுத்தாததால், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாநகர காவல் துணை ஆணையா் ஈஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மேற்கண்ட 57 கடைகளையும் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.