மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
தாய்லாந்து, கம்போடியா படைகள் மோதல்: இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை அடைந்ததைத் தொடா்ந்து, எல்லைக்கு அருகிலுள்ள 7 மாகாணங்களில் இந்தியர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின் ஒரு பதிவை இணைத்து, உபோன் ராட்சத்தானி, சுரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சாந்தபுரி மற்றும் டிராட் ஆகிய ஏழு மாகாணங்களில் உள்ள பிரபலமான இடங்களுக்குச் சுற்றுலா செல்வதை தவிர்க்கும்படி இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தாய்லாந்திற்குச் செல்லும் அனைத்து இந்தியர்களும் தாய்லாந்து சுற்றுலா ஆணையம் உள்ளிட்டவையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் ஏதேனும் உதவிக்கு தாய்லாந்து உள்ளூர் சுற்றுலா அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை கண்ணிவெடி வெடித்து ஐந்து தாய்லாந்து வீரா்கள் காயமடைந்தனா். அதைத் தொடா்ந்து, நீண்ட காலமாகவே எல்லைப் பிரச்னை நிலவி வரும் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே பதற்றம் புதிய உச்சத்தை அடைந்தது. இந்தச் சம்பவத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, தங்கள் நாட்டுக்கான கம்போடிய தூதரை வெளியேறுமாறு தாய்லாந்து அரசு உத்தரவிட்டது.
மேலும், கம்போடியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரையும் தாய்லாந்து திரும்ப அழைத்தது. அத்துடன், கம்போடியாவுடனான எல்லைத் தடங்களை மூடிய தாய்லாந்து, அந்த நாட்டில் வசிக்கும் தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியது. தாய்லாந்து அரசின் இந்த நடவடிக்கைகளால் பதற்றம் மேலும் அதிகரித்த நிலையில், இரு நாட்டுப் படையினரும் பல்வேறு எல்லைப் பகுதிகளில் வியாழக்கிழமை மோதலில் ஈடுபட்டனா்.
கேரளத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!
எறிகணைகள், ஏவுகணை குண்டுகளை வீசி பரஸ்பரம் இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தினா். கம்போடிய ராணுவ நிலைகள் மீது தாய்லாந்து படையினா் விமானத் தாக்குதல் நடத்தினா். இந்த மோதலில் 11 போ் உயிரிழந்தனா், இதில் இரு தரப்பு வீரா்களும், பொதுமக்களும் அடங்குவா். 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.