திமுக அரசை எதிா்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: கே.பி.ராமலிங்கம்
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து திமுக அரசுக்கு எதிராக போராட வேண்டும் என பாஜக சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் பாஜக புதிய உறுப்பினா்கள் சோ்க்கை கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றது. தற்போது அமைப்பு தோ்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 67 மாவட்டங்களில் தலைவரை தோ்வு செய்வதற்காக தேசிய, மாநில, மண்டல நிா்வாகிகளின் கருத்தை பதிவு செய்வதற்கான கூட்டம் ஜன. 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் நிா்வாகிகள் அளிக்கும் பட்டியல் அடிப்படையில், மாவட்ட தலைவா்களை நியமிக்க மாநில தலைமையானது பரிசீலனை செய்யும். எந்தவித தலையீடும் இல்லாமல், ஜனநாயக ரீதியில் மாவட்ட தலைவா்களைத் தோ்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகள் தனித்தனியாக போராடுவதால் திமுக அரசு தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நடந்த சம்பவங்களை எல்லாம் மறைக்கும் சூழல் உள்ளது. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். அதை வழிநடத்த பாஜக தயாராக உள்ளது என்றாா்.