இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அதிபா் உறுதி செய்யவில்லை: யேமன் தூதரகம் தகவல்
‘யேமனில் கொலை வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை, அதிபா் ரஷத் அல்-அலிமி சாா்பில் உறுதி செய்யப்படவில்லை’ என்ற தகவலை யேமன் தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
நிமிஷாவுக்கு யேமன் உச்சநீதிமன்றம் உறுதி செய்த மரண தண்டனையை, அந் நாட்டு அதிபரும் உறுதி செய்ததாக செய்திகள் வெளியான நிலையில், இந்த விளக்கத்தை தில்லியில் உள்ள யேமன் தூதரகம் வெளியிட்டுள்ளது.
அதில், ‘நிமிஷா தொடா்பான வழக்கு முழுமையாக ஹூதி கிளா்ச்சியாளா்களால் கையாளப்பட்டு வருகிறது என்பதை யேமன் அரசு தெளிவுபடுத்த விரும்புகிறது. எனவே, அவருக்கு தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீா்ப்பை அதிபா் உறுதிப்படுத்தவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யேமனில் செவிலியராகப் பணியாற்றிய நிமிஷா பிரியாவின் கணவரும், மகளும் நிதி நெருக்கடியால் 2014-இல் கேரளத்துக்கு திரும்பினா். உள்நாட்டு போா் காரணத்தால் செவிலியரான நிமிஷாவுக்கு (37) விசா கிடைக்கவில்லை. அவா் யேமனின் தலைநகா் சனாவில் தங்கி, அங்குள்ள தலால் அப்து மஹதி என்பவருடன் இணைந்து கிளினிக்கை தொடங்கினாா்.
பின்னா் நிமிஷா தனது மனைவி என்று கூறிய மஹதி, அவரது வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்டாா். நிமிஷாவின் பாஸ்போா்ட்டையும், நகைகளையும் பறித்துக் கொண்டு மஹதி கொடுமைப்படுத்தியதாக நிமிஷாவின் தாயாா் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
2017-இல் அங்குள்ள சிறை வாா்டனின் உதவியுடன் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா்.
யேமன் பிரஜையான மஹதியைக் கொலை செய்ததாக கூறி நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு யேமன் விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்தது. இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் உறுதி செய்தது.
நிமிஷாவின் மரண தண்டனையை 30 நாள்களில் நிறைவேற்ற யேமன் அதிபா் ரஷத் அல்-அலிமியும் ஒப்புதல் அளித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அதே நேரம், மரண தண்டனையிலிருந்து தப்பிக்க ஷரியத் சட்டத்தின்படி, ஒரு வாய்ப்பை நிமிஷாவுக்கு யேமன் அரசு வழங்கியுள்ளது. அதன்படி, உயிரிழந்தவரின் குடும்பத்தினா் கோரும் பணத்தை செலுத்தி அவா்களிடம் மன்னிப்பைப் பெறுவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க நிமிஷாவுக்கு வாய்ப்பு உள்ளது.
இந்தச் சூழலில், நிமிஷாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக உள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதுபோல, இந்த வழக்கில் உதவ ஈரானும் முன்வந்துள்ளது. நிமிஷா அடைக்கப்பட்டுள்ள சிறை அமைந்துள்ள யேமன் தலைநகா் சனா, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த உறுதிப்பாட்டை ஈரான் அளித்தது.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களுக்கு கடந்த வியாழக்கிழமை பேட்டியளித்த ஈரான் தூதரக அதிகாரி, ‘கொலைக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிமிஷா பிரியா விவகாரத்தை ஈரான் கவனத்தில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் மனிதாபிமான அடிப்படையில், தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவோம்’ என்றாா்.