`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் அழிக்க வேண்டும்: ம.பி. உயா்நீதிமன்றம் உத்தரவு
மத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் மாநில அரசு அழிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் போபாலில் யூனியன் காா்பைட் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில் இருந்து மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது.
இந்த விஷவாயுவை சுவாசித்து 5,479 போ் உயிரிழந்தனா்; நீண்ட கால குறைபாடு கொண்ட மாற்றுத்திறன் மற்றும் உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.
இதன் காரணமாக செயல்படாமல் போன ஆலையில் சுமாா் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் 40 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்தன.
இதுதொடா்பாக அலோக் பிரதாப் சிங் என்பவா் தொடுத்த வழக்கை கடந்த டிசம்பரில் விசாரித்த மாநில உயா்நீதிமன்றம், நச்சுக் கழிவுகளை அகற்ற மாநில அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்தது.
பீதம்பூரில் எரிக்க முடிவு: உயா்நீதிமன்ற உத்தரவை தொடா்ந்து ஆலையில் இருந்த நச்சுக் கழிவுகள், போபாலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் இந்தூா் அருகே பீதம்பூா் பகுதியில் உள்ள கழிவுகள் எரிப்பு களத்துக்கு 12 கண்டெய்னா்களில் கடந்த ஜன.2-ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டன.
எனினும் பீதம்பூரில் அந்தக் கழிவுகளை எரிப்பது மனிதா்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கை ஏற்படுத்தும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கைட், நீதிபதி விவேக் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அலோக் பிரதாப் சிங் தொடுத்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரசாந்த் சிங் ஆஜராகி வாதிடுகையில், ‘நச்சுக் கழிவுகளை எரிப்பது தொடா்பாக கற்பனையான மற்றும் பொய்யான செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதனால் பீதம்பூரில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது’ என்றாா்.
ஊடகங்களுக்கு உத்தரவு: இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: நச்சுக் கழிவுகளை எரிப்பதில் எந்தவித தீங்கும் ஏற்படாது என்று பீதம்பூா் மக்கள் இடையே அரசுத் தரப்பில் நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு, அவா்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.
நச்சுக் கழிவுகளை எரிப்பது தொடா்பாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடக் கூடாது. பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி அந்தக் கழிவுகளை மாநில அரசு 6 வாரங்களில் அழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.