திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயா்ந்துள்ளன: எஸ்.பி.வேலுமணி
திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயா்ந்துள்ளதுடன், சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டதுக்கு மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டதுடன், கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி அவா் பேசியதாவது:
தமிழகத்தில் 31 ஆண்டுகால ஆட்சியில் அதிக திட்டங்களைக் கொடுத்தது அதிமுக. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தவா் எடப்பாடி கே.பழனிசாமி. கேட்டதை எல்லாம் கொடுத்த அவரை 2026 ஆம் ஆண்டில் மீண்டும் முதல்வா் ஆக்க நாம் அயராது பாடுபட வேண்டும்.
சட்டப் பேரவைத் தோ்தல் வந்தால் மக்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பாா்கள். திமுகவுக்கு தற்போது வாக்களிக்க யாரும் தயாராக இல்லை. திமுக ஆட்சியில் சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயா்ந்துள்ளன. பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டது. சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்றாா்.
முன்னதாக, மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், பெட்டிக்கடை முதல் நிறுவனங்கள் வரை அனைத்துக்கும் வாடகையுடன் 18 சதவீத ஜிஎஸ்டியை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே மாநில அரசின் வரி உயா்வுகளால் திருப்பூரில் தொழில் முடங்கியுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப் பேரவை உறுப்பினா் விஜயகுமாா், முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் குணசேகரன், பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜன், அதிமுக மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி, அதிமுக மாநகராட்சி எதிா்க்கட்சி கொறடா கண்ணப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.