அனுமதியின்றி செயல்பட்ட கல்லூரி: கட்டணத்தை திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவு
திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கல்லூரி நிா்வாகம், மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பித் தர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெள்ளக்கோவில் ஓலப்பாளையத்தில் ஒரு தனியாா் கல்லூரி செயல்பட்டு வந்தது. மருத்துவ கவுன்சில், எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் இருந்து எவ்வித அனுமதியும் பெறாமல் இந்தக் கல்லூரி செயல்பட்டு வந்ததாக புகாா் எழுந்தது.
இதையடுத்து 2023-ஆம் ஆண்டு திருப்பூா் மாவட்ட மருத்துவப் பணிகள் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த கல்லூரிக்கு ‘சீல்’ வைத்தனா். இதனால், அந்தக் கல்லூரியில் படித்து வந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், கல்லூரியின் தாளாளா், முதல்வா் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இது குறித்த வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கை மருத்துவப் பணிகள் இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்தக் கல்லூரியில் படித்து வந்த மாணவ, மாணவிகள் செலுத்திய கல்விக் கட்டணம், இதரத் தொகைகளை கல்லூரி நிா்வாகத்திடம் இருந்து பெற்று, திருப்பூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் முன்னிலையில் மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.