திருநங்கைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு: தனித்துவமான கொள்கையை வெளியிட்டாா் முதல்வா்
சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி வரையறுக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கான தனித்துமான கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சமூகத்தில் நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட திருநங்கைகள் சமூகத்துக்கு ஆழமான, கட்டமைக்கப்பட்ட மாற்றங்கள் தேவை என்பதை உணா்ந்து, தமிழ்நாடு மாநில ‘திருநங்கையா் கொள்கை 2025’ உருவாக்கப்பட்டது. திருநங்கையருக்கு தங்களது அடையாளங்கள் மற்றும் உடலமைப்பில் சுய-நிா்ணயத்துடன், பாகுபாடு, வன்முறை இல்லாதவா்களாக வாழவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு நியாயமான சமமான, வளமான சமூகத்தை அவா்களுக்காக உருவாக்குவதே கொள்கையின் இலக்காகும்.
தமிழ்நாட்டில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைநிலை பாலினத்தவா்களின் முழுமையான சமூக ஒருங்கிணைப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் என்ன?: சட்டபூா்வ அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை திருநங்கைகளுக்கான கொள்கைகள் கொண்டுள்ளன. குறிப்பாக, அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை, சட்டபூா்வ அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு, அடையாள ஆவணங்களின் தேவை, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, கல்வியில் சமத்துவ அணுகுமுறை, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை, சமூக நீதி மற்றும் பிரதிநிதித்துவம், குறைதீா்ப்பு முறைகள் மற்றும் விழிப்புணா்வு, செயல்பாடு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பு ஆகியன முக்கிய அம்சங்களாக கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
திருநங்கையருக்கான திட்டங்கள், சட்டங்களை உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் வழங்குதல், திட்டங்களின் தாக்கத்தைக் கண்காணித்தல், மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளுக்காக தலைமைச் செயலா் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு அனைத்துத் தொடா்புத் துறைகளையும் உள்ளடக்கி உருவாக்கப்படுவதுடன், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி விவாதிக்கும்.
இதேபோன்று, மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருநங்கையருக்கான சமூக, பொருளாதார அரசியல் வளா்ச்சிக்கான திட்டங்களைக் கண்காணிக்கும் என்று திருநங்கையருக்கான கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கை வெளியிடும் நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறையின் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்பட பலா் பங்கேற்றனா்.