'நானே நேர்ல வரேன்' அப்பாயின்ட்மென்ட் கேட்ட போராட்டக்குழுவுக்கு விஜய் பதில் - பரந...
திருவையாறில் ஸ்ரீ தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 ஆவது ஆராதனை விழாவின் கடைசி நாளான இன்று பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவேரி கரையில் சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் சமாதி அமைந்துள்ளது. தியாகராஜர் மறைந்த பகுளபஞ்சமி அன்று ஆண்டுதோறும் கர்நாடக இசை கலைஞர்கள் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க |பொங்கல் பண்டிகை: மது விற்பனையில் முதலிடத்தை நழுவவிட்ட மதுரை!
கடந்த 14 ஆம் தேதி மாலை ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 ஆவது ஆராதனை விழா தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாடெங்கும் உள்ள பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து கடைசி நாளான இன்று ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்னையையொட்டி காலை திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து உஞ்சவிருத்தி பஜனை பாடி தெற்கு வீதி, கும்பகோணம் சாலை வழியாக தியாகராஜர் நினைவிடம் அமைந்துள்ள விழா பந்தலுக்கு வந்தனர்.
அங்கு தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பிறகு, மங்கள இசை காலை 9 மணிக்கு துவங்கியது.
தியாகராஜரின் முத்தான ஐந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஆயிரம் கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் - ஒரே ராகத்தில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் பிரபல பாடகர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, ஓ.எஸ்.அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.