தில்லி மெட்ரோவில் ஒரே நாளில் 78.67 லட்சம் பயணிகள் பயணம்
தேசிய தலைநகரில் கடுமையான மாசு நிலவி வரும் நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் தில்லி மெட்ரோவில் திங்கள்கிழமை மட்டும் அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாக 78.67 லட்சம் பயணிகள் பயணம் செய்திருப்பதாக அதிகாரபூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை நிகழாண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி 77.49 லட்சமாக பதிவாகி இருந்ததாகவும், அதைவிட தற்போதை எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புள்ளிவிவரத் தரவுகளின்படி, குருகிராமில் உள்ள மில்லினியம் சிட்டி சென்டா் முதல் தில்லியில் உள்ள சமய்ப்பூா் பாத்லியுடன் இணைக்கும் மஞ்சள் வழித்தடத்தில் திங்கள்கிழமை (நவம்பா் 18), 20.99 லட்சம் என்ற எண்ணிக்கையில் அதிக பயணிகள் பயணம் செய்தனா்.
அதே நாளில் நீல வழித்தடத்தில் 20.80 லட்சம் பயணிகளும், சிவப்பு வழித்தடத்தில் 8.56 லட்சம் பயணிகளும், பிங்க் நிற வழித்தடத்தில் 8.15 லட்சம் பயணிகளும், வயலட் நிற வழித்தடத்தில் 7.93 லட்சம் பயணிகளும் பயணம் செய்திருப்பது பதிவாகியுள்ளது.
இதேபோன்று, மெஜந்தா நிற வழித்தடத்தில் 6.19 லட்சம் பயணிகளும், பசுமை வழித்தடத்தில் 4.12 லட்சம் பயணிகளும், விமான நிலைய வழித்தடத்தில் 81,985 பயணிகளும், ரேபிட் மெட்ரோ வழித்தடத்தில் 57,701 பயணிகளும், சாம்பல் நிற வழித்தடத்தில் 50,128 பேரும் பயணித்துள்ளனா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தில்லியில் நிலவிவரும் மாசு சூழலில், அதிகமான மக்கள் மெட்ரோவைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) வார நாள்களில் 60 தடவை கூடுதல் பயணங்களை இயக்குகிறது. இது வழக்கத்தைவிட அதிக திறனை வழங்குவதாகும்.
டிஎம்ஆா்சி நிகழாண்டு ஆகஸ்ட் முதல் 25 தடவை அதிக பயணிகள் பயணங்களை பதிவு செய்துள்ளது. தனியாா் வாகனங்களைவிட அதிகமான மக்கள் மெட்ரோவைத் தோ்வு செய்கிறாா்கள். இது வாகன உமிழ்வைக் குறைப்பதால் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் காற்றின் தரத்தை மேம்படுத்த இது உதவும்.
வசதியான பயணத்தை மேற்கொள்ள பயணிகளுக்காகடிஎம்ஆா்சி பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்வேறு எண்ம இணையதளங்கள் மூலம் ஒற்றை அல்லது பல பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் திறனும் இதில் இடம்பெற்றுள்ளது.
இதனால், பயணிகள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தங்கள் பயணங்களை ரயில் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமின்றி திட்டமிட அனுமதிக்கிறது.
ஐஆா்சிடிசி, என்சிஆா்டிசி, ஐடிபிஓ போன்ற நிறுவன ங்களுடனான கூட்டாண்மையானது பயணிகளுக்கு மெட்ரோவில் பயணம் செய்தவை இலகுவதாக்குவது மட்டுமின்றி, பல்வேறு சலுகைகள் மற்றும் நிகழ்வுகளுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பயண விருப்பங்களையும் சிரமமின்றி அணுகுவதை எளிதாக்கியுள்ளது.
டிஎம்ஆா்சி மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து விருப்பங்களில் ஒன்றாகும். அதன் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையில் காா்பன் குறைப்புகளுக்காக பதிவு செய்யப்பட்ட உலகின் முதல் மெட்ரோ அமைப்பாக பதிவு செய்யப்பட உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.