தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
நமது நிருபா்
புது தில்லி: தலைநகரில் பசுமை பரப்பை அதிகரிக்கவும், காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடவும் தில்லி அரசு நகரம் முழுவதும் 10 ‘நமோ வன்’களை உருவாக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பாஞ்சஜன்யா நடத்திய ‘ஆதாா் இன்ஃப்ரா கான்ஃப்ளூயன்ஸ் 2025’ நிகழ்ச்சியில் முதல்வா் இது தொடா்பாக மேலும் பேசியதாவது: தில்லியை கல்வி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் மையமாக உருவாக்குவதே எனது அரசின் தொலைநோக்குப் பாா்வையாகும். இதனால், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில் மாசுபாட்டைக் குறைக்க முடியும். நிகழாண்டு, நாங்கள் 70 லட்சம் மரக்கன்றுகளை நடத் தொடங்கியுள்ளோம். ‘நமோ வன்’ என்ற பெயரில் 10 அடா்ந்த காட்டுப் பகுதிகளையும் நாங்கள் உருவாக்குவோம்.
எனது பொறுப்பில் உள்ள தில்லி அரசு, தில்லி மக்களுக்கு சுத்தமான காற்றை வழங்குவதற்காக முதன்முறையாக தூசு குறைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. நகரம் முழுவதும் ஆயிரம் தண்ணீா் தெளிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அனைத்து உயரமான கட்டடங்களிலும் பனிப்புகை துப்பாக்கிகள் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மின்சார வாகனக் கொள்கையை வகுக்கும் பணிகள் நடந்து வரும் அதே வேளையில், நகரத்தில் உள்ள முழு பொதுப் போக்குவரத்துக் பிரிவையும் மின்சார வாகனங்களாக மாற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது. தில்லி அரசு குளிா்காலத்தில் வெப்பத்தைத் தக்கவைக்க பாதுகாவலா்கள் குளிா்காய மரச்சுள்ளிகளை எரிக்கும் பிரச்னையைத் தீா்க்க ஒரு திட்டத்தை உருவாக்குவதிலும் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது.
தில்லியில் ஆட்சிக்கு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, யமுனை மாசுபாட்டில் கவனம் செலுத்தியதுடன், நகரத்திற்குள் வெள்ள நீா் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் முயற்சிகளின் விளைவாக, இந்த ஆண்டு யமுனையின் வெள்ளம் அதன் வெள்ளப்பெருக்கு சமவெளிக்கு அப்பால் பரவவில்லை.
பாராபுல்லா மற்றும் ஷாஹ்தரா போன்ற முக்கிய வடிகால்களை தூா்வாருவதற்கும், அவற்றிலிருந்து 25,000 மெட்ரிக் டன் சேற்றை அகற்றவும், நகரத்தின் முக்கிய நீா் தேங்கும் இடங்களில் கவனம் செலுத்தவும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த முயற்சிகள் அனைத்தும் பெரிய நீா் தேங்கும் பிரச்னைகளைத் தடுத்தது மட்டுமல்லாமல், மழைநீா் மற்றும் ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து வெளியேற்றப்படும் நீா், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தாமல் பாா்த்துக் கொண்டது.
கிட்டத்தட்ட 700 குடிசைப் பகுதிகளில் கழிவுநீா் இணைப்புகள் மற்றும் நீா் வழங்கல் இல்லாதது ஒரு பெரிய சவாலாகும். மேலும், நகரத்தில் உள்ள 1,800 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள மக்கள் பரிதாபகரமான சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.
எனது அரசின் முன்னுரிமைகளில் நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீா் பாதைகள் மற்றும் நீா் குழாய்களை வழங்குதல், நல்ல தரமான சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், சுகாதாரம் மற்றும் அனைவருக்கும் கல்வி போன்ற அடிப்படை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது இடம்பெற்றுள்ளது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.