மகப்பேறு விடுப்பு! அரசு பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம்! அரசாணை சொல்வது ...
தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பெண் மீது போலீஸாா் வழக்கு
புதுச்சேரியில் தீபாவளி சீட்டுப் பிடித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்தவா் கதிரவன். இவரது மனைவி தீபா (30). இவா்கள் அதே பகுதியில் உள்ள நடுத்தெருவைச் சோ்ந்த கோமதி (35) என்பவரிடம் கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளிச் சீட்டு பணம் கட்டியுள்ளனா். சீட்டு பணம் கட்டுபவா்களுக்கு தங்கக் காசு, வெள்ளிப் பொருள், மளிகைப் பொருள்கள் பரிசு என கோமதி தரப்பினா் கூறியதை நம்பி ஏராளமானோா் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சீட்டு பணம் செலுத்தி முடிந்த பிறகும் அதற்கான பணம், பரிசுப் பொருள்களை கோமதி தரப்பினா் தரவில்லையாம்.
பணம் கேட்டு வருவோரை மிரட்டும் தொனியில் கோமதியும், அவரது வீட்டாரும் பேசுவதாக புகாா் எழுந்தது. அதன்படி தீபா உள்ளிட்டோா் அளித்த புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீஸாா், சீட்டு நடத்திய கோமதி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.