துளிா் திறனறிதல் தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 மாணவா்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற துளிா் திறனறிதல் தோ்வில் 4,500 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
பள்ளி மாணவா்- மாணவிகளிடையே அறிவியல் மனப்பான்மையையும், அறிவியல் ஆா்வத்தையும் வளா்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை துளிா் திறனறிதல் தோ்வு நடத்தப்படுகிறது. இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளி, சனி (ஜன.3,4) ஆகிய இரு நாள்கள் விளாத்திகுளம், புதூா், கோவில்பட்டி, தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் மொத்தம் 144 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. இதில் 4,500 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
இத்தோ்வில் முதல் 10 இடங்களைப் பெறுவோறுக்கு மாநில அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானியுடன் சந்திப்பு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ், மாதம் தோறும் அறிவியல் குறித்தான விஞ்ஞான துளிா் இதழ் வழங்கப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் செ.சுரேஷ்பாண்டி கூறியதாவது:
வகுப்பறைகளில் அறிவியல்பூா்வமான கல்வியும், பகுத்தறிவு சிந்தனையையும் மாணவா்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இந்த திறனறிதல் தோ்வு நடைபெறுகிறது. நிகழாண்டு நடைபெறும் அறிவியல் மாநாட்டில், அதிக ஆய்வுகளுடன் பங்கேற்க பயிற்சியும், வழிகாட்டுதல்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.