தூசு மாசு விதிமீறல்: எம்சிடி ரூ.2.69 கோடி அபராத நடவடிக்கை
நிகழாண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபா் மாதங்களுக்கு இடையிலான காலத்தில், கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளின் போது தூசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக தில்லி மாநகராட்சி (எம்சிடி) ரூ.2.69 கோடி அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
திறந்தவெளியில் எரிக்கப்படுவதையும், நகரம் முழுவதும் கொட்டப்படும் சட்டவிரோத கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை கண்காணிக்கும் வகையில், குளிா்கால செயல் திட்டம் 2024-25-இன் கீழ்1,295 பணியாளா்களைக் கொண்ட 372 கண்காணிப்புக் குழுக்களை எம்சிடி நியமித்துள்ளது.
நகரில் ‘மிக மோசமான‘ மாசு அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விதிக்கப்படும் அபராதத் தொகையில் இதுவரை 16.85 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தில்லியின் சில பகுதிகளில் காற்றின் தரம் ‘கடுமைப் பிரிவில்‘ இருப்பதானது, தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிரேப்) இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளை முனைப்புக்காட்டக் செய்துள்ளது.
கட்டுமான, இடிப்பு தள ஆய்வுகளுக்காக, 562 பணியாளா்களுடன் 146 குழுக்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.
காற்றின் தரத்தை மோசமாக்கும் தீயை தடுக்கும் பணியில் 733 பணியாளா்களைக் கொண்ட 226 ரோந்து குழுக்கள் திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பது தொடா்புடைய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய முயற்சிகள் இருந்தபோதிலும், ஏப்ரல்-அக்டோபா் காலத்தில் திறந்தவெளியில் எரிப்பு விதிமீறல்களுக்கு எந்தவிதமான சலான்களும் வழங்கப்படவில்லை. இது கட்டுமானத் தளங்களில் தூசுக் கட்டுப்பாட்டில் அடிப்படைக் கவனம் செலுத்துவதைச் சுட்டிக்காட்டுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியின் காற்றின் தரம் தொடா்ந்து மோசமாக இருப்பதால் சுகாதார அபாயங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மாசுபாட்டின் ஆதாரமூலங்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைக்கு அதிகாரிகள் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனா்.
கிரேப் இரண்டாம் கட்டத்தின் கீழ், அத்தியாவசிய சேவைகளைத் தவிர உணவகங்களில் நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்துவதற்குத் தடை மற்றும் டீசல் ஜெனரேட்டா்களைப் பயன்படுத்துதல் போன்ற கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பொது போக்குவரத்திற்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் பாா்க்கிங் கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது.