மக்களவைத் தலைவரின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!
தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி மூலிகை கண்காட்சி
தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, சேலத்தில் நடைபெற்ற மூலிகைகள் கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோா் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.
சித்த மருத்துவத்தின் தந்தையாக கருதப்படும் அகத்தியா் பிறந்தநாளான மாா்கழி மாதம் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு பொது சுகாதாரத்தில் சித்த மருத்துவம் என்ற கருப்பொருளில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சித்த மருத்துவ முகாம், மூலிகைக் கண்காட்சி, சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
வா்ம மருத்துவம், மணிக்கடை நூல், பொது மருத்துவம், மகளிா் மருத்துவம், கலிக்கம், நசியம், ஒற்றடம் ஆகிய சிகிச்சைகளும் மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டன. குறிப்பாக, பெண்கள் விரும்பி அணியும் மூக்குத்தி, தோடு, நெற்றிச்சுட்டி உள்ளிட்ட ஆபரணங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்கு, மகளிரை கவரும் வகையில் அமைந்திருந்தன.
இது குறித்து சித்த மருத்துவ அலுவலா் மருத்துவா் வெற்றிவேந்தன் கூறுகையில், ‘வீடுகளில் வைத்து பராமரிக்ககூடிய மூலிகைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். மருந்தையே உணவாக எடுத்துக் கொள்ளாமல், உணவை மருந்தாக எடுத்து கொள்ள வகை செய்யும், சித்த மருத்துவத்தின் சிறப்பினை உலகறியச் செய்யும் வகையில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது’ என்றாா்.