தேனி மாவட்டத்தில் 18 இடங்களில் முதல்வா் மருந்தகம் திறப்பு
தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் புதிதாக 18 முதல்வா் மருந்தகங்களை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
தேனி மாவட்டத்தில் தேனி வட்டாரத்தில் தேனி பி.டி. ராஜன் தெரு, அல்லிநகரம் சமதா்மபுரம், கொடுவிலாா்பட்டி, பழனிசெட்டிபட்டி, போடியில் பெரியாண்டவா்புரம் தெரு, பெரியகுளம் வட்டாரத்தில் ஜெயமங்கலம், வடுகபட்டி, தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி வட்டாரத்தில் ஜக்கம்பட்டி, கண்டமனூா், கோவில்பட்டி, உத்தமபாளையம் வட்டாரத்தில் கம்பம், கம்பம்மெட்டு சாலை, கூடலூா், மேலக்கூடலூா், க.புதுப்பட்டி, கோம்பை, தேவாரம் ஆகிய 18 இடங்களில் கூட்டுறவு சங்கம், தொழில் முனைவோா் சாா்பில் முதல்வா் மருந்தகம் திறக்கப்பட்டது.
தேனி, சமதா்மபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட முதல்வா் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் குத்து விளக்கேற்றி வைத்து பாா்வையிட்டாா். இந்த நிகழ்வில், தேனி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா், தேனி நகா்மன்றத் தலைவி பா. ரேணுப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.