தேனி மாவட்டத்தில் மே 9, 12-இல் உள்ளூா் விடுமுறை
தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆகியவற்றை முன்னிட்டு, வருகிற 9, 12-ஆம் தேதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்சீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைய ஈடு செய்யும் வகையில் வருகிற 17-ஆம் தேதி அரசு அலுவலகங்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படும்.
இதேபோல, தமிழக எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் வருகிற 12-ஆம் தேதி சித்திரை முழு நிலவு விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 31-ஆம் தேதி அரசு அலுவலகங்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படும்.
உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்பட்ட வருகிற 9, 12-ஆம் தேதிகளில் மாவட்ட தலைமை கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்றாா் அவா்.