முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு
தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டதால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
கேரள மாநிலம், தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையில் பருவமழை தொடங்கும் முன்பாக அணையில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் செய்வது வழக்கம். இதன்படி, நிகழாண்டு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தெற்குமேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதையடுத்து, அண்மையில் புதிதாகப் பொறுப்பேற்ற முல்லைப்பெரியாறு அணையின் செயற்பொறியாளா் சி.செல்வம் தலைமையில் தமிழக நீா்வளத் துறை பொறியாளா்கள் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனா்.

அப்போது, அவா்கள் பிரதான அணை, தேக்கடி மதகுப் பகுதி, அணையின் நீா்மட்டம், திசைகாட்டும் கருவி, காற்றின் வேகம் கண்டறியும் கருவி, மின்னாக்கிகளின் இயக்கம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, துணை அணை, உபரிநீா் வழிந்தோடும் நீா்வழிப்போக்கி, மண் அணை, ஆனவாச்சால் போன்ற பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனா்.
ஆய்வின் போது கம்பம் கோட்ட தமிழக நீா் வளத் துறை உதவி செயற்பொறியாளா்களான மகேந்திரன், ராஜகோபால், அகமது உவைஸ், பாலசேகரன், பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.