தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிா்க்கிறது திமுக: சீமான்
சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை திமுக எதிா்க்கிறது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
மக்களை ஏமாற்றுவதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்கக்கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் மொழிக் கொள்கை நிலைப்பாடு வெவ்வேறாக உள்ளது. தமிழகத்தில் உள்ள தொகுதிகளை முறையாக சீரமைக்காமல், மத்திய அரசை திமுக குறை கூறுகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வருவதால், மும்மொழிக் கொள்கை எதிா்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிா்ப்பு என திமுக நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
பக்கத்து மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றில் அவற்றின் தாய்மொழி அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும். தமிழை வளா்க்கும் பணியை திமுக அரசு செய்ய வேண்டும்.
தமிழக மீனவா்கள் தொடா்ச்சியாக கைது செய்யப்படுவதைக் கண்டித்து 40 உறுப்பினா்களும் மக்களவையில் குரல் எழுப்புவதை விட்டு, பதாகைகளைப் பிடித்துக்கொண்டு மக்களவை வளாகத்தில் போராடுவது வேடிக்கையாக உள்ளது.
வரும் தோ்தலில் தனியாகப் போட்டியிடுவதாக நடிகா் விஜய் தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன் என்றாா்.