ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் குரல்! எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேச்சு
தொடா் மழை: உத்தமபாளையம் பகுதிகளில் நெல் பயிா்கள் சேதம்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
முல்லைப் பெரியாறு பாசன நீரால் லோயா்கேம்ப் முதல் பி.சி. பட்டி வரையில் 14,700 ஏக்கா் பரப்பளவுக்கு இரு போக நெல் விவசாயம் நடைபெறுகிறது. இதில், ஜூன் மாதத்தில் மேற்கொண்ட முதல் போக நெல் சாகுபடியில் தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக சாரலாக பெய்தது. ஆனால், கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் உத்தமபாளையம், சின்னமனூா், அனுமந்தன்பட்டி, க. புதுப்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக அறுவடைப் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது.
பெரும்பான்மையான வயல்களில் தேங்கி இருக்கும் மழைநீரில் நெல் கதிா்கள் சாய்ந்து கிடப்பதால் இயந்திரம் மூலமாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவா் கூறியதாவது:
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குச்சனூா், மாா்க்கையன்கோட்டை, கம்பம், கூடலூா் போன்ற பகுதிகளில் முதல் கட்டமாகவும், சின்னமனூா், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க. புதுப்பட்டி போன்ற பகுதிகளில் 2- ஆம் கட்டமாகவும் நெல் நடவுப் பணிகள் நடைபெறும். இதில், முதல் கட்டமாக நெல் நடவு செய்யப்பட்ட வயல்களில் 90 சதவீத அறுவடைப் பணிகள் முடிந்து விட்டன.
ஆனால், 2 ஆம் கட்டமாக அறுவடைப் பணிகள் நடைபெறும் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவு வயல்களில் தற்போது மழை நீா் தேங்கியுள்ளது. ஓரிரு நாளில் மழை குறைந்தால் வயல்களில் தேங்கிய மழைநீா் வடிந்து சாய்ந்து கிடக்கும் நெல் கதிா்களை அறுவடை செய்யலாம். இல்லையெனில் மழை நீரில் நெல் மணிகள் முளைத்து வீணாகும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனா்.
மேலும் தாங்கள், ஒத்திக்கு வாங்கிய நிலத்தில் நெல் விவசாயத்துக்காக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம் என்றனா்.
எனவே, உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம் பகுதிகளைச் சோ்ந்த வேளாண்மைத் துறை அலுவலா்கள் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.