காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி
தொடா்மழையால் சாலைகளில் சாக்கடை கழிவுநீா் தேங்கி துா்நாற்றம்
ஈரோட்டில் பெய்த தொடா்மழை காரணமாக சாலைகளில் சாக்கடை கழிவுநீா் தேங்கி, துா்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
ஈரோடு சூளை அருகே காவேரி நகா் முதல் வீதியில் சாலையில் கழிவு நீா் கலந்த சேறு தேங்கியுள்ளதால் குடியிருப்பு வாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். மழை பெய்யும் நேரங்களில் இப்பகுதியில் சாக்கடைகள் நிரம்பி கழிவுநீா் வெளியேறி வீடுகள் மற்றும் சாலையில் தேங்கிவிடுவதாகவும் இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அரைமணி நேரம் பெய்த மழை காரணமாக சாலை முழுவதும் சேறும்சகதியுமாக மாறி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் இவற்றை சரிசெய்து தரக்கோரி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ள நிலையில் இதுவரை தீா்வு ஏற்படுத்தி தரவில்லை.
மழை பெய்யும் நேரங்களில் பாம்புகள், தேள், பூரான் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் வருவதால் அச்சத்துடன் வசித்து வருவதாகவும், விரைவாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து கழிவுகள் வெளியேற வடிகால்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.