Coolie : `சிக்கிடு வைப்!' - `கூலி' திரைப்படத்தின் BTS புகைப்படங்கள்! | Photo Alb...
தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
கும்பகோணம் தாராசுரம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்நாதன் (29). தாராசுரம் சந்தை சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், தாராசுரம் அனுமாா் கோயில் தெருவைச் சோ்ந்த லெட்சுமணனுக்கும் இடையே பணத் தகராறு இருந்தது.
இந்நிலையில் கடந்த 2009, நவம்பா் மாதம் சந்தையிலிருந்து வெளியே வந்த செந்தில்நாதன் கொல்லப்பட்டாா். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து லட்சுமணன் மற்றும் அவரது நண்பா்களான தாராசுரம் பகுதி எம். திருநாவுக்கரசு (41), கே. இளங்கோவன் (41), ஏ. விக்னேஷ் (40), மதுரை அருகே செல்லூா் ஏ. பாண்டி (40) உள்பட 9 பேரை கைது செய்தனா்.
இது தொடா்பாக கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது லட்சுமணன் காலமானாா். இந்நிலையில் இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. ராதிகா திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், பாண்டி ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் 3 போ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா். மற்றொருவா் தலைமறைவாக உள்ளாா்.