‘நரிவேட்டை’ படத்தில் காட்சிகள் நீக்கம்? படக்குழு விளக்கம்!
டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படத்தின் சில காட்சிகள், தணிக்கை வாரியத்தால் நீக்கப்பட்டுள்ளது என்று வெளியான செய்திகளுக்கு படக்குழு விளக்கமளித்துள்ளது.
டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான அரசியல் ஆக்ஷன் திரைப்படம் ‘நரிவேட்டை’. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவானதாகச் சொல்லப்படும் இந்தப் படம்; கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் பிரபல தமிழ் இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் வன்முறைக் காட்சிகள் இருப்பதால், இப்படம் மீண்டும் தணிக்கைச் செய்யப்பட்டு சில முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இதையடுத்து, அப்படி எந்தவொரு காட்சிகளும் நீக்கப்படவில்லை எனவும், பிரபல ராப் பாடகரான வேடனின் பாடல் ஒன்று தணிக்கைச் செய்யப்பட்டு தற்போது இணைக்கப்பட்டுள்ளது எனவும் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் சினிமா கம்பனி விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
“அன்பான நேயர்களே, நரிவேட்டை திரைப்படம் மீண்டும் தணிக்கைச் செய்யப்பட்டு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி எந்தவொரு காட்சிகளும் நீக்கப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். பிரபல ராப் பாடகர் வேடனின் ‘வாடா வேடா’ பாடல் மட்டுமே தணிக்கைச் செய்யப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் வெளியான நாளன்று இருந்தக் காட்சிகள் அனைத்தும் தற்போதும் உள்ளது எனவும், ஊடகங்கள் மற்றும் சினிமா பிரியர்கள் எந்தவொரு தவறான தகவல்களையும் பரப்ப வேண்டாமெனவும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிக்க:துடரும் பட வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்: முதல் படத்திலேயே அசத்திய பிரகாஷ் வர்மா!