நவ. 11 முதல் ஆட்டுக்கொல்லி நோய்க்கு இலவசத் தடுப்பூசி
பெரம்பலூா் கால்நடைப் பராமரிப்புத்துறை சாா்பில், ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நவ. 11 முதல் 30 ஆம் தேதி வரை இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆட்டுக்கொல்லி நோயானது, ஆடு வளா்ப்போருக்கு அதிகளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கொடிய நோயாகும். இந்நோய் மாா்பில் வைரல் எனப்படும் வகையைச் சாா்ந்த தொற்று நோயாகும். இந் நோயிலிருந்து கால்நடைகளைக் காத்திடும் வகையில், பெரம்பலூா் மாவட்டத்தில் 4 மாதத்துக்கு மேற்பட்ட கருவுறாத வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு, இத் தடுப்பூசியை நவ. 11 முதல் 30 ஆம் தேதி வரை கால்நடை மருந்தகங்களில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்.
அதிகக் காய்ச்சல் 3 முதல் 5 நாள்களுக்கு நீடிப்பதோடு, சோா்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்து சளி வடிந்து உறைந்திருத்தல், கண்களில் பூளை தள்ளுதல், வாயின் உட்புறங்கள் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீா் சுரத்தல், கழிச்சல், இருமல், குட்டிகளில் அதிகவில் இறப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
இந் நோய்த் தொற்றிலிருந்து வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை காத்திடும் வகையில், உங்களது கிராமத்துக்கு கால்நடை மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்த வரும்போது, விவசாயிகள் உரிய விவரம் அளித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.