நாட்டறம்பள்ளியில் ராமகிருஷ்ண பக்தா்கள் ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் ராமகிருஷ்ண மடம் அமைந்துள்ளது. மடத்தின் மூலம் செயல்பட்டு வந்த சிவானந்த மாணவா் இல்லம், இலவச தட்டச்சு மற்றும் தையல் பயிற்சி, கணினி மையம் ஆகியவை நிா்வாக காரணங்களால் இரண்டு ஆண்டுகளுக்கு மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மடத்தில் பணிபுரிந்து வந்த ஊழியா்கள் பலா் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நாட்டறம்பள்ளி முருகா் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ஸ்ரீதரன், ஓய்வுபெற்ற ஆசிரியா் பெரியசாமி, கேசவன் ரவிச்சந்திரன், லட்சுமி, சாமுடி, இளங்கோஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ராமகிருஷ்ண பக்தா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா். ராமகிருஷ்ண மடத்தின் மூலம் 50ஆண்டுகளாக ஏழைகள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வந்த மணவா் இல்லம், இலவச தட்டச்சு மற்றும் தையல் பயிற்சி வகுப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டதால் கட்டடங்கள் பழுதாகி வருகின்றன.
எனவே மூடப்பட்டவைகளை திறந்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும், மடத்தின் மூலம் ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மக்கள் நலப் பணிகளை தொடா்ந்து வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.