செய்திகள் :

"நான் ரகசிய கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு உண்மையான காரணம் இதுதான்" - நடிகை தேவயானியின் பர்சனல்ஸ்

post image
தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா கோலோச்சிய அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம் நடிகை தேவயானி.
நடிகை தேவயானி

திடீர் திருமணம் பத்தின கேள்விக்கு, தேவயானி கொடுத்த நெத்தியடி பதில்!

“நான் பரபரப்பா நடிச்சிட்டிருந்த நேரத்துல, திடீர்னு கல்யாணம் பண்ணேன். அது இவ்ளோ பெரிய பேசுபொருளா மாறும்னு நினைக்கவேயில்லை. அந்த நேரத்துல, ‘அடடா.... உன் வாழ்க்கையை இப்படிக் கெடுத்துக்கிட்டியேம்மா!' -அப்படின்னு பலரும் சொன்னாங்க. ஆனா, நடிச்சு பணம் சம்பாதிச்சுக்கிட்டே இருந்தா மட்டும் போதுமா? மனசுனு ஒண்ணு இருக்கே. அதனாலதான் என் வாழ்க்கைக்குச் சரினு பட்ட முடிவைச் சரியான நேரத்துல எடுத்தேன்!" - தன் திடீர் திருமணம் பத்தின கேள்விக்கு, நடிகை தேவயானி கொடுத்த நெத்தியடி பதில் இது.

ஆமாங்க... சினிமாவுல டாப் ஹீரோயினா இருந்தப்பவே தான் நேசிச்ச இயக்குனர் ராஜகுமாரனோட அன்புக்காக, சினிமா, வீடு, உறவுனு எல்லாத்தையுமே உதறிட்டு காதலுக்கு மரியாதை செஞ்சவங்கதான் நடிகை தேவயானி. பப்ளியான முகம், முல்லைப்பூ நிறம், க்யூட்டான சிரிப்பு, நடிப்பு மற்றும் நடனம்னு சினிமா நடிப்புக்குப் பக்கவா பொருந்திப்போகிற திறமைனு தமிழ் சினிமாவுல தனக்குனு நிலையான இடம் பிடிச்ச தேவயானியின் அழகான திரைப் பயணத்தை பத்திதான் பார்க்கப் போறோம்.

நடிகை தேவயானி

தேவயானி மும்பையில பிறந்தவங்க. இவரோட மூத்த தம்பிதான் நடிகர் நகுல். தேவயானி குழந்தையா இருந்தப்போ, இவரின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருத்தர், 'எதிர்காலத்துல இந்தப் பொண்ணு பெரிய சினிமா ஸ்டாரா வரும்'னு சொன்னாராம். ஆனா, அவரோட பேச்சை தேவயானியின் பெற்றோர் நம்பல. ஜோதிடர் சொன்னதுபோலவே, ‘கோயல்’ அப்படிங்கிற ஹிந்தி படத்துல தேவயானி நடிக்க கமிட் ஆனாங்க. ஆனா, அந்தப் படம் முழுசா எடுக்கப்படாம, பாதியிலேயே டிராப் ஆகிடுச்சு. 1993-ல ‘ஷாத் பஞ்சோமி’ங்கிற பெங்காலி படத்துலதான் தேவயானி முதன்முதல்ல ஹீரோயினா அறிமுகம் ஆனாங்க.

அதுக்கப்புறமா ஒரு மராத்தி படத்துலயும், சில மலையாளப் படங்கள்லயும் நடிச்சவங்க, 1995-ல ‘தொட்டாச்சிணுங்கி’ படம் மூலமா தமிழ்ல கால் பதிச்சாங்க. அந்தப் படத்துல தேவயானி நடிச்சது கிளாமர் ரோல்ல. ஆனா, தேவயானியின் அந்த கேரக்டரை தமிழ் மக்கள் ரசிக்கல. சொல்லப்போனா, தேவயானிக்கே தான் நடிச்ச அந்த கேரக்டர் பிடிக்கலை. இதுகுறித்து பல இடங்கள்ல பேசியிருக்கிற தேவயானி, “தொட்டாச்சிணுங்கி படத்துல நான் போட்டிருந்த கிளாமர் காஸ்ட்யூம்கள் எனக்கு செட் ஆகல. குறிப்பா, அது எனக்கு கம்ஃபர்ட்டபிளாவும் இல்ல” அப்படின்னு வெளிப்படையா சொல்லியிருக்காங்க.

'கல்லூரி வாசல்' படத்துல, நடிகர் அஜித்தை ஒன் சைடா காதலிக்கிற கேரக்டர்ல நடிச்சிருப்பாங்க தேவயானி. அந்தப் படம் ஹிட் ஆகாததால, இந்த முறையும் தமிழ் மக்கள்கிட்ட தேவயானிக்கு உரிய ரீச் கிடைக்கல. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொடுக்கும்ணு சொல்ற மாதிரி, 1996-ல இவங்க நடிப்புல 'காதல் கோட்டை' படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறமா, நடிகை தேவயானியைத் தமிழ் மக்கள் தங்கள் வீட்டுப் பொண்ணா வாரி அணைச்சுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும்.

'காதல் கோட்டை' படத்தில்...

‘பார்க்காமலேயே காதல்’ - அதுவரைக்கும் யாருமே யோசிக்காத வித்தியாசமான இந்த கான்செப்ட்டை வெச்சு இயக்குனர் அகத்தியன் எடுத்த 'காதல் கோட்டை' படம் சூப்பர் ஹிட்டாச்சு. கோபம், அன்பு, காதல், இயலாமை, கழிவிரக்கம்னு எல்லாம் கலந்த ஒரு பொண்ணா ‘கமலி’ங்கற ரோல்ல அஜித்துக்கு ஜோடியா நடிச்சு அசத்தியிருப்பாங்க. அதிலும், ரயில்வே ஸ்டேஷன்ல தேவயானியும் அஜித்தும் சந்திக்கிற அந்த கிளைமாக்ஸ் காட்சி, தேவயானியின் நடிப்புத் திறமைக்குச் சரியான சாட்சி. இந்தப் படத்துல வர்ற 'நலம் நலமறிய ஆவல்' பாடல் அப்போதைய காதலர்களின் விருப்பமான கீதமாவும் மாறுச்சு. அதுவரைக்கும் தேவயானிக்கு இருந்த இமேஜை மாத்தி, ஹோம்லி குயினா மக்கள் மனசுல நிலையான இடத்தையும் 'காதல் கோட்டை' பெற்றுக்கொடுத்துச்சு. அப்போதைய இளைஞர்கள், 'தனக்கு வரப்போற மனைவி தேவயானி மாதிரி இருக்கணும்'னு சிலாகிச்சாங்க.

“ 'காதல் கோட்டை' படத்துல நான் கமிட் ஆனப்போ என் கையில வேற படங்கள் எதுவுமே இல்ல. அந்தப் படம் மட்டும் ஓடாம போயிருந்தா... நான் சினிமாவை விட்டே விலகிருப்பேன்; எனக்குனு நிலையான சினிமா வாழ்க்கையும் இருந்திருக்காது” அப்படின்னு நெகிழ்ச்சியா ஒரு பேட்டியில சொல்லிருக்காங்க தேவயானி. அதுக்கப்புறமா, முரளியோட 'பூமணி', ஜெயராமுடன் 'பெரிய இடத்து மாப்பிள்ளை'னு சில படங்கள்ல நடிச்சாங்க. இவங்க சினிமா கரியரையே வேற லெவலுக்குக் கொண்டுபோன இன்னொரு படம்தான் 'சூரியவம்சம்'.

மனைவியை கலெக்டராக்கி அழகு பார்க்கிற முற்போக்கான கணவரா சரத்குமார். கணவரைத் தொழிலதிபரா உயர்த்திப் பார்க்கிற அன்பு மனைவியா தேவயானி. மாவட்ட கலெக்டரா இருந்தாலும் மாமனாருக்கு மரியாதைக் கொடுக்கிற மருமகளா வாழ்றதுன்னு 'சூர்யவம்சம்' படத்துல நடிப்புல பயங்கரமா ஸ்கோர் பண்ணியிருப்பாங்க தேவயானி. இந்தப் படத்துல வர்ற ‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' பாட்டு, சாதிக்கத் துடிக்கிறவங்களுக்கு எனர்ஜி பூஸ்டரா தன்னம்பிக்கையைக் கொடுக்கும். குறிப்பா, இந்தப் படம் மூலமா இட்லி உப்புமாவுக்கு அகில உலக வரவேற்பை வாங்கிக் கொடுத்த தேவயானி, தமிழ்க் குடும்பங்களின் மனசுல நீங்கா இடம் பிடிச்சதுடன், முன்னணி நடிகையா உச்சத்துக்குப் போனாங்க.

'சூர்யவம்சம்' படத்தில்...

இதைத் தொடர்ந்து, 'நன்றி சொல்ல உனக்கு... வார்த்தையில்லை எனக்கு'னு மம்மூட்டிக்கு ஜோடியா 'மறுமலர்ச்சி'யில நெகட்டிவ் டு பாசிட்டிவ் ரோல்ல நடிச்ச தேவயானி, நடிகர் விஜய்யுடன் 'நினைத்தேன் வந்தாய்’ படத்துல காமெடி, இமோஷன்னு வெரைட்டியான நடிப்பைக் கொடுத்தாங்க. 'கல்லூரி வாசல்', 'காதல் கோட்டை' படங்களுக்கு அப்புறமா ‘தொடரும்’ படத்துல அஜித்துக்கு ஜோடியா நடிச்சாங்க. தன் கணவர் மேல உச்சகட்ட பொஸஸிவ்னெஸ் உள்ள பொண்ணா நடிச்சு மிரட்டியிருப்பாங்க. பின்னர், அஜித்துடன் இவங்க மறுபடியும் நடிச்ச படம்தான் ‘நீ வருவாய் என’. அதிகம் பேசாம, தன் கண்களாலும் உடல்மொழியாலும் மட்டுமே உணர்வுகளை வெளிப்படுத்துற கேரக்டர், தேவயானிக்கு அவ்வளவு அழகா பொருந்தியிருக்கும். பார்த்திபன் மற்றும் அஜித்துக்கு நடுவுல தன் பாத்திரத்தை ரொம்ப லாகவமா ஹேண்டில் பண்ணி நடிச்ச தேவயானி, 'பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்'னு இளைஞர்களை முணுமுணுக்க வெச்சாங்க.

1990-களின் இறுதியில, தமிழ் சினிமாவுல தவிர்க்க முடியாத ஹீரோயினா இருந்தாங்க தேவயானி. அவங்களோட முக்கியத்துவத்தை கவித்துவமா சொல்ற மாதிரி, 'தித்திக்கும் தேவயானி... தினம்தோறும் தேவைதான் நீ' அப்படின்னு 'வல்லரசு' படத்துல காதலால கசிந்துருகிப் பாடி நடிச்சிருப்பார் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமா ஹிட் ஜோடிகள்ல, சரத்குமார் - தேவயானிக்கு முக்கிய இடமுண்டுன்னு சொல்லலாம். 'சூரியவம்சம்' படத்துக்குப் பிறகு, 'மூவேந்தர்', 'பாட்டாளி', 'சமஸ்தானம்', 'ஒருவன்', 'தென்காசிப்பட்டணம்'னு நிறைய ஹிட் படங்கள்ல இவங்க ரெண்டு பேரும் ஜோடியா நடிச்சாங்க.

இப்படி, ஹோம்லி ஹீரோயினா கலக்கிட்டிருந்த தேவயானி, 'பாரதி' திரைப்படத்துல மகாகவி பாரதியாரோட மனைவி ரோல்ல நடிச்சது யாருமே எதிர்பார்க்காத ஆச்சர்யம். குடும்பத்தை கவனிக்காம நாடு, விடுதலைன்னு மட்டுமே வாழுற கணவனை நினைச்சு நினைச்சு கவலைப்பட்டு உள்ளுக்குள்ளேயே புழுங்குற அந்த செல்லம்மாவாவின் நடிப்புக்கு, தமிழ்நாடு அரசாங்கத்தின் சிறந்த நடிகைக்கான விருது கிடைச்சது.

'ஆனந்தம்' படத்தில் தேவயானி

பாரதி படத்துக்கு அப்புறமா நடிகர் ஜெயராமுக்கு ஜோடியா இவங்க நடிச்ச 'தெனாலி' படமும் தேவயானிக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்துச்சு. இதன் தொடர்ச்சியா, நடிகர் விஜய்க்கு ஜோடியா 'பிரெண்ட்ஸ்' படத்துலயும் அசத்தினாங்க. 'விண்ணுக்கும் மண்ணுக்கும்', 'ஆனந்தம்', 'என் புருஷன் குழந்தை மாதிரி', 'கோட்டை மாரியம்மன்', 'அழகி', 'பஞ்சதந்திரம்'னு நிக்க நேரமில்லாம பல படங்கள்ல நடிச்சாங்க தேவயானி.

தேவயானியோட ஒரிஜினல் வாய்ஸ், குழந்தை பேசுறது மாதிரி க்யூட்டா இருக்கும். அதுபோல 'பஞ்சதந்திரம்' படத்துல தன் ஒரிஜினல் வாய்ஸ்ல, 'எவ்ளோ பெரிய மாத்திரை'னு இவங்க பேசிய ஒன்லைன் காமெடி, பெரிதும் பேசப்பட்டுச்சு. புகழின் உச்சத்துல இருந்தப்பவே, தேவயானி திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டது யாருமே எதிர்பார்க்காத திருப்பமாவும், தலைப்புச் செய்தியாவும் மாறுச்சு.

கணவர் ராஜகுமாரனுடன் நடிகை தேவயானி

இயக்குனர் விக்ரமன்கிட்ட உதவி இயக்குனரா இருந்தவர்தான் ராஜகுமாரன். 'சூரியவம்சம்' ஷூட்டிங்ல, தேவயானிக்கு ராஜகுமாரன்தான் டயலாக் சொல்லிக் கொடுத்திருக்கார். எந்தவொரு பாசாங்கும் இல்லாம ரொம்ப வெள்ளந்தியா ராஜகுமாரன் பேசுன விதம், தேவயானிக்கு ரொம்ப பிடிச்சுப்போயிருக்கு. பின்னர், ராஜகுமாரன் தேவயானியை வெச்சு ‘நீ வருவாய் என’ படத்தை இயக்க, அப்போ இவங்க ரெண்டு பேருக்கும் இடையில நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கு. 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' திரைப்படத்தை ராஜகுமாரன் இயக்குனப்போ, நடிகை தேவயானியும் ராஜகுமாரனும் காதலிக்கத் தொடங்கிட்டாங்க. தேவயானி - ராஜகுமாரன் காதலுக்கு, தேவயானி குடும்பத்துல பயங்கர எதிர்ப்பு வரவே... 2001-ம் வருஷம், தேவயானி தன் வீட்டை விட்டு வெளியேறி ராஜகுமாரனை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

பின்னர், பலரும் பலவிதமா இவங்க ரெண்டு பேரையும் விமர்சனம் பண்ணாலும், தேவயானியும் ராஜகுமாரனும் தங்கள் காதல்லயும் அன்புலயும் கடைசிவரை உறுதியா இருந்தாங்க. காதல் திருமணத்தால, தன் பெற்றோர் மற்றும் தம்பிகளோட அன்பை இழந்த தேவயானி, அந்த வருத்தத்தை வெளிக்காட்டிக்காம, குடும்பம் மற்றும் சினிமால தொடர்ந்து கவனம் செலுத்தினாங்க. தன் கணவருக்காக ‘காதலுடன்’ படத்தை தயாரிச்ச தேவயானி, அதுல ஹீரோயினாவும் நடிச்சாங்க. அந்தப் படம் தோல்வி அடைஞ்சப்பவும் அவங்க உடைஞ்சு போயிடல. எஸ்.ஜே. சூர்யாவோட ‘நியூ’ படத்துல, வளர்ந்த குழந்தைக்கு அம்மாங்கற ரொம்ப டெலிகேட்டான பாத்திரத்தை தேவயானி ஸ்மார்ட்டா ஹேண்டில் பண்ணிருப்பாங்க.

நடிகை தேவயானி

“எஸ்.ஜே. சூர்யா சார் இந்த கேரக்டரை பத்தி சொன்னப்போ அம்மாவா நான் பண்ணவே மாட்டேன்னு சொல்லிட்டேன். ஆனா, அவர் என் வீட்டுக்கே வந்து, அந்த கேரக்டரோட முக்கியத்துவத்தை விளக்கினார். அப்புறமாதான் நான் ஒத்துக்கிட்டேன்" அப்படின்னு தன் செகண்டு இன்னிங்ஸ் பத்தி ஒரு பேட்டியில சொன்னாங்க தேவயானி. 'அழகி', 'கிரி'னு சில படங்கள்ல குணச்சித்திர நடிகையாவும் கவனம் ஈர்த்த தேவயானி, சன் டிவியில ஒளிபரப்பான 'கோலங்கள்' சீரியல்ல நடிச்சு, தமிழ்க் குடும்பங்களின் செல்ல மகளா எகோபித்த அன்பையும் பெற்றாங்க.

நடிப்பு, குடும்பம்னு பரபரப்பான வேலைகளுக்கு நடுவுல, தனியார் பள்ளி ஆசிரியையாவும் சில காலம் வேலை செஞ்சாங்க. குடும்பம்தான் இவங்களுக்கு உலகம். அந்தக் கூட்டுக்கும் உரிய கவனமும் நேரமும் கொடுத்து, தன் குடும்பத்தையும் அழகா கட்டமைச்சிருக்காங்க. அதுல, அன்பான கணவர், இனியா, பிரியங்கானு க்யூட்டான மகள்களுடன் சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கிற தேவயானி, பொறுப்பான இல்லத்தரசியா வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் திறம்பட செய்துமுடிக்கிறாங்க.

"சினிமாவோ, சீரியலோ, டீச்சிங் பணியோ... எந்த வேலையைச் செஞ்சாலும் அதுக்கு என்னோட நூறு சதவிகித உழைப்பை எப்போதும் கொடுப்பேன். இந்த உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும்தான் நான் இப்போ சினிமா கரியர்ல பீக்ல இல்லாதப்பவும் என்னைத் தொடர்ந்து மக்கள் மனசுல இருக்க வெச்சிருக்குன்னு நினைக்கிறேன்” அப்படின்னு நிகழ்ச்சி ஒண்ணுல பேசும்போது குறிப்பிட்டிருக்காங்க நம்ம 'அழகு மயில்' தேவயானி.

நகுல் குடும்பத்தினருடன், அக்கா தேவயானி குடும்பத்தினர்...

உண்மைதான்! உழைப்பைவிட உயர்வு தர்ற ஒரு விஷயம் உலகத்துல வேறு எதுவும் இருக்கா என்ன? தேவயானி... எப்போமே தமிழ்க் குடும்பங்களின் பிரியத்துக்குரிய திரை தேவதைதான்!

- நாயகிகள் வருவார்கள்!

Vijay TVK: 2G, Time To Lead, விவசாயப் பிரச்னை - விஜய்க்கு அரசியல் இமேஜ் கொடுத்த 5 படங்கள்

'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்ஷன் ஹீரோ, வசூல் நாயகன், இளைய தளபதி , தளபதி என அடுத்தடுத்த கட்டங்களை எட்டி இப்போது கட்சித் தலைவர் என்ற நிலையை எட்டி இருக்கிறார் விஜய... மேலும் பார்க்க

AMARAN: இராணுவ அதிகாரிகளுக்குப் பிரத்தியேகமாக திரையிடப்பட்ட 'அமரன்' - குவியும் பாராட்டுகள்!

கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.தேசத்திற்காக உயிரைத் தியாகம் ... மேலும் பார்க்க

Simbu: ஆட்டத்துக்கு ரெடியான சிம்பு; 'STR49' படப்பிடிப்பு எப்போது? அசத்தும் `STR50' அப்டேட்!

மீண்டும் அதிரடி ஆட்டத்திற்கு ரெடியாகிவிட்டார் சிம்பு. சமீபத்தில் அவரது 49வது படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ''Zen G தலைமுறை கொண்டாடும் வகையில், விண்டேஜ் எஸ்.டி.ஆரின் அனைத்து மேனரிசங்களுடன், இளமை துள்ள... மேலும் பார்க்க

Surya: `சூப்பர் ஸ்டார்' என அழைத்த தொகுப்பாளர்; சூர்யா அளித்த பதில்; கொண்டாடும் ரசிகர்கள்!

தொகுப்பாளர் ஒருவர் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டதற்கு சூர்யா அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா நடிப்பில் `சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கங்குவா'. மிகப் பி... மேலும் பார்க்க