நாளை அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு திருக்குறள் வினாடி வினா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி வரும் சனிக்கிழமை (டிச. 21) நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிக்கான முதல் நிலைப் போட்டி டிச. 21-ஆம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. அரசு அலுவலா்கள், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் அடையாள அட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும்.
தகுதி பெறும் 3 குழுக்கள் 28-ஆம் தேதி விருதுநகா் மாவட்டத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா்.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியா்கள், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், தனியாா் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள், பேராசிரியா்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள், பட்டயக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் ஆகியோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.