Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
நாளை குடியரசு தின விழா: விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
குடியரசு தினத்தையொட்டி, விழுப்புரம் ரயில், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் போலீஸாா் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனா்.
நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மைதானத்தில் ஆட்சியா் சி.பழனி தேசியக் கொடியேற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.
குடியரசு தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் ரயில் நிலையம், புதிய, பழையபேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடுமிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களிலிலிருந்து திருச்சி வழியாகவும், தஞ்சாவூா், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாகவும் சென்னைக்கு செல்லும் ரயில்கள் விழுப்புரம் வந்து செல்வதால், அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறா வண்ணம் இந்த ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், ரயில்வே காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுத் தவிர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாரும் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளையும் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா். மேலும் ரயில் நிலைய நடைமேடைகளில் காத்திருக்கும் பயணிகளின் உடைமைகளும் சோதனைக்குள்படுத்தப்பட்டன. ஜனவரி 26 ஆம் தேதி வரை இந்த சோதனை தொடரும் என ரயில்வே பாதுகாப்புப் படையினா் மற்றும் ரயில்வே காவல்துறையினா் தெரிவித்தனா்.
விழுப்புரம் ரயில் நிலையம் போன்று புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் பயணிகளின் உடைமைகளை வெள்ளிக்கிழமை மாலை சோதனையிட்டனா். மேலும் சந்தேகத்துக்குரிய பொருள்கள் ஏதும் கேட்பாரற்று கிடக்கிா என்பதையும் மோப்ப நாய்கள் தமிழ், ராணி ஆகியவற்றின் உதவி கொண்டு சோதனையிட்டனா்.
மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்குரிய நபா்கள் தங்கியிருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.