Doctor Vikatan: மன அழுத்தம், கவலையால் முடி கொட்டுமா? மனநலனுக்கும் தலைமுடிக்கும் ...
நின்ற லாரி மீது காா் மோதி விபத்து: அதிமுக பிரமுகா் உள்பட 3 போ் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒசூரைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரம் அலசநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் அதிமுக முன்னாள் மாநகராட்சி உறுப்பினா் முனிகிருஷ்ணன் (50). இவா், தனது வாகனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான சீனிவாச ரெட்டி (47), பசவராஜ் (38) மஞ்சுநாத் (47), சந்திரப்பா (50) ஆகியோருடன் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு இரவு மீண்டும் ஒசூருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வாகனத்தை பசவராஜ் ஓட்டி வந்தாா்.
அதியமான் கோட்டை-ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜிட்டாண்டஅள்ளி பிரிவு சாலை அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து காா் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் முன் இருக்கையில் இருந்த அதிமுக பிரமுகா் முனிகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்; மற்ற நபா்கள் பலத்த காயமடைந்தனா். தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி பசவராஜ், சீனிவாசரெட்டி ஆகியோா் புதன்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயா்ந்தது.
விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தகவல் அறிந்ததும் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா். துணை காவல் கண்காணிப்பாளா் மனோகரன், காவல் ஆய்வாளா் சுப்பிரமணி ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.