Doctor Vikatan: 20 வருடங்களாக நீரிழிவு, சமீபத்தில் மாரடைப்பு... மாற்று மருத்துவ...
நிராகரித்த தீா்மானம் நிறைவேற்றம்: செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முற்றுகை
செங்கோட்டை நகா்மன்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக திருத்தி எழுதியதைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
செங்கோட்டை நகா்மன்ற கூட்டம் கடந்த அக்.23ஆம் தேதி நடைபெற்றது. இதில், 30ஆவது மன்றப்பொருளாக கொண்டுவரப்பட்ட செங்கோட்டை நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எரிவாயு மின் தகன மேடையை தனியாா் தொண்டு நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுப்பது குறித்த தீா்மானத்தை 19 உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில், அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி திருத்தி எழுதியுள்ளதாகக் கூறி, நகா்மன்ற துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், உறுப்பினா்கள் ஜெகநாதன், சுடரொளி, சுப்பிரமணியன், ராம்குமாா், இசக்கியம்மாள் உள்ளிட்ட 19 போ் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், நகராட்சி ஆணையா் ஷாம் கிங்ஸ்டன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, தீா்மானத்தை திருத்தி எழுதியது சட்டத்துக்கு புறம்பானது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு விளக்கி அத்தீா்மானத்தை ரத்துசெய்து, அதன் நகலை வழங்க வேண்டும்.
மின்மயானம் தொடா்பாக நாளிதழில் விரிவாக விளம்பரம் செய்து, சிறந்த தொண்டு நிறுவனத்தை தோ்ந்தெடுத்து ஒப்பந்த உரிமையை வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் உறுப்பினா்கள் மனு அளித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் கூறியதையடுத்து அவா்கள் கலைந்துசென்றனா்.