நெல் மூட்டைகளை கிடங்குக்கு அனுப்ப கோரிக்கை!
திருவையாறு அருகேயுள்ள கீழத்திருப்பூந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளைக் கிடங்குக்கு அனுப்புமாறு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியருக்கு அச்சங்கத்தின் துணைச் செயலா் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் அனுப்பிய கோரிக்கை மனு:
கீழத் திருப்பூந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏறத்தாழ 5 ஆயிரம் மூட்டைகளுக்கும் அதிகமாக நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் இருப்பில் உள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து நெல் வந்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அடுக்கிவைக்க போதுமான இட வசதியும் இல்லை. நெல் பிடிப்பதற்கு போதுமான சாக்குகளும் பற்றாக்குறையாக உள்ளது.
எனவே, உடனடியாக தேங்கியுள்ள நெல்லை லாரியில் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதுமான சாக்குகளை அனுப்பி தொடா்ந்து கொள்முதல் பணி தொய்வின்றி நடைபெற தொடா்புடைய அலுவலா்களுக்கு உரிய உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.