நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?
நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார்.
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியாவின் வர்த்தகம் மேம்பட்ட நிலையை எட்டிய பின், அதனைத்தொடர்ந்து தனக்கு அடுத்து சரியானதொரு ஆள் தலைமைப் பதவிக்கு தேர்வான பின், நோக்கியாவின் நிர்வாக ரீதியிலான பொறுப்புகளிலிருந்து தான் விலகுவேன் என்று முன்பு பெக்கா லண்ட்மார்க் கூறியிருந்ததைச் சுட்டிக்கட்டியுள்ள நோக்கியா நிறுவன இயக்குநர்கள் வாரியத்தின் தலைவர் சரி பால்டாஃப், மார்ச் 31-ஆம் தேதி பெக்கா லண்ட்மார்க் பதவி விலகுவதாகவும், அதனைத்தொடர்ந்து இந்தாண்டு இறுதிவரை புதிய தலைவரின் ஆலோசகராக பெக்கா லண்ட்மார்க் செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நோக்கியா நிறுவனத்தின் புதிய தலைவராக ‘இண்டெல்’ நிறுவனத்தின் ஜஸ்டின் ஹோடார்ட் ஏப்ரல் 1-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.
ஒருகாலத்தில், உலகெங்கிலும் அலைபேசி சந்தையில் கோலோச்சிய நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்கள் வருகைக்கு பின் விற்பனையில் சரிவைக் கண்டது. நோக்கியா கடினமான தருணங்களை எதிர்கொண்ட நேரத்தில் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் லண்ட்மார்க்.
அவரது தலைமையின்கீழ், 5ஜி ரேடியோ வலைதளத்திலும் க்ளௌவ்ட் கோர் நெட்வொர்க்கிலும் தன்னை முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக நிலைநிறுத்திக் கொண்ட நோக்கியா நிறுவனம், மறுசீரமைப்பைக் கண்டதுடன் எழுச்சியும் கண்டது.
நோக்கியாவை தலைமையேற்று வழிநடத்த தேர்வாகியுள்ள ‘இண்டெல்’ நிறுவனத்தின் ஜஸ்டின் ஹோடார்ட், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றில் சுமார் 25 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவராவார். அவர் தற்போது இண்டெல் நிறுவனத்தில் ‘தகவல் தரவு மையம்(டேட்டா செண்டர்) மற்றும் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) பிரிவுக்கு தலைமை தாங்குகிறார்.
அதற்கு முன்னர், உலகின் முன்னணி கணினி மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘ஹெவ்லெட் பேக்கார்ட்(எச்பி) எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தில் முக்கியான தலைமை பொறுப்புகளை அவர் வகித்தவர்.
இந்த நிலையில், நோக்கியா நிறுவனத்துக்கு ஏஐ மற்றும் தகவல் தரவு சந்தைகளில் வளர்ச்சி தேவைப்படும் சூழலில், மேற்கண்ட துறைகளில் அனுபவம் வாய்ந்த ஜஸ்டின் ஹோடார்ட் இந்நிறுவனத்துக்கான சரியான வழிகாட்டியாக இருப்பார் என்று சரி பால்டாஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“நோக்கியாவின் வளர்ச்சிக்காவும் மதிப்புக்காவும் அந்நிறுவனத்தின் திறனை அதிகரிக்கச் செய்வதற்கான அதன் பயணம் தொடருவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாக” மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ஜஸ்டின் ஹோடார்ட்.