குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!
மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து எல் ப்ரோக்ரெசோ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பாலத்திலிருந்து திங்கள்கிழமை (பிப். 10) கீழே விழுந்த பேருந்து சுமார் 65 அடி தூரத்துக்கு உருண்டு உருக்குலைந்துள்ளது.
பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த பிற வாகனங்கள் மீது மோதி பாலத்திலிருந்து கீழே விழுந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 30 ஆண்டுகள் பழமையானது என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 70 பேரில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் பெர்னார்டோ அரேவாலோ, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படுமென்றும் கூறியுள்ளார்.