வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்: மோடி
பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி: ராகுல் கண்டனம்!
பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி செய்து வருவதாக ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான காலியாக உள்ள இடஒதுக்கீடு பதவிகள் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மோடி அரசை தாக்கிப் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் பதிவில்,
நாடாளுமன்றத்தில் மோடி அரசு முன்வைத்த புள்ளி விரவங்கள் பகுஜன்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கும், நிறுவன ரீதியான மனுவாதம் இருப்பதற்கும் உறுதியான சான்றாகும்.
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்டி-களுக்கான பேராசிரியர் பதவிகளில் 83 சதவீதமும், ஓபிசிகளுக்கான 80 சதவீதமும், எஸ்சிகளுக்கான 64 சதவீதமும் வேண்டுமென்றே காலியாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதே நேரத்தில், எஸ்டி-களுக்கான உதவிப் பேராசிரியர் பதவிகளில் 65 சதவீதமும், ஓபிசி-களுக்கான 69 சதவீதமும், எஸ்சி-களுக்கான 51 சதவீதமும் காலியாக விடப்பட்டுள்ளன.
இது வெறும் அலட்சியம் மட்டுமல்ல.. பகுஜன் சமூகத்தை ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளிலிருந்து விலக்கி வைப்பதற்கான திட்டமிடப்பட்ட சதியாகும். பல்கலைக்கழகங்களில் 'பகுஜன்களின்' போதுமான பங்கேற்பு இல்லாததால், தாழ்த்தப்பட்ட சமூகங்களின் பிரச்னைகள் ஆராய்ச்சி மற்றும் விவாதங்களிலிருந்து வேண்டுமென்றே மறைந்துபோகும்படி செய்யப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி வேட்பாளர்கள் மனுவாத சிந்தனையின் கீழ் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். மேலும் அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்கத் தயாராக இல்லை. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
காலியாக உள்ள அனைத்து பதவிகளும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மனுவாதம் புறக்கணிப்பு அல்ல, பகுஜன்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.