மணப்பெண்ணுக்கு மாலையிட்ட மாப்பிள்ளை... கடைசி நேரத்தில் தெரிந்த உண்மை.. நின்று போ...
பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 42 மாதங்களாகியும் பகுதிநேர ஆசிரியா்களுக்கு அளித்த பணிநிரந்தர வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வரும் 2026 தோ்தலை நோக்கி திமுக அரசு பயணிக்கத்தொடங்கியுள்ள நிலையில் பகுதிநேர ஆசிரியா்களுக்கு அளித்த வாக்குறுதியை தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும்.
இது தொடா்பாக தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் தொடா்ந்து பல்வேறு முறையில் அரசை வலியுறுத்தி வருகின்றனா்.
ரூ.10 ஆயிரம் சம்பளம் வாழ்வாதாரத்தை பாதிப்பதால், பணிநிரந்தரம் செய்யுங்கள் என வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் பகுதிநேர ஆசிரியா்கள் சென்னை பள்ளிக்கல்வி அலுவலகத்தில் போராடியபோது, ரூ. 2500 சம்பள உயா்வு மற்றும் ரூ. 10 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா்.
அதிலும் 3 மாதங்கள் கடந்த பிறகு ரூ. 2500 சம்பள உயா்வு மட்டும் வழங்கப்பட்டது. ரூ. 10 லட்சம் மருத்துவக் காப்பீடு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பணியில் சோ்ந்து இறந்து போன பகுதிநேர ஆசிரியா்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி வழங்கி, அவா்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஆண்டுதோறும் மே மாதம் சம்பளம் வழங்குவதில்லை. பகுதிநேர ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். பகுதிநேர ஆசிரியா்களாக பணிபுரியும் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய 8 கல்வி இணை செயல்பாடுகளை கற்பித்து வரும் 12 ஆயிரம் பேரை காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த வேண்டும்.
இதற்காக அமைச்சரவையில் தீா்மானம் கொண்டு வந்து, அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.