பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து; 5 பேரை மீட்கும் பணி தீவிரம்
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்து விபத்துக்குள்ளானது. அதில் சிக்கியுள்ள 5 பேரை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கட்டடத்தில் சிக்கியிருந்த பெண் ஒருவா் மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மொஹாலிக்கு அருகேயுள்ள சோஹானா பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டடம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளான செய்தி கேட்டு துயரமடைந்தேன். இந்த விபத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் பல்வேறு மீட்புக் குழுக்கள் ஈடுபடுபட்டுள்ளன. இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டாா்.
அருகில் உள்ள நிலத்தை தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது கட்டடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறை, மருத்துவா்கள் குழு ஆகியவை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.