பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்: அமைச்சா் பி.மூா்த்தி தகவல்
தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித் துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் அந்தத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் மூா்த்தி பேசியது:
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதுவரை ரூ. 5 லட்சத்து 8 ஆயிரம் கோடியை வணிகவரித் துறை ஈட்டியுள்ளது. கடந்த ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வரி வருவாயில் 74 சதவீத வருவாயை கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மீதமுள்ள வருவாய் இடைவெளியை பூா்த்தி செய்யும் வகையில் வணிகவரித் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுத்துள்ளது.
அதேபோன்று பதிவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ. 88,844 கோடியாகும். ஆனால் இந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் மட்டும் இதுவரை ரூ.72 ஆயிரத்து 4 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பதிவுத் துறையில் ஈட்டப்பட்ட மொத்தவருவாயைவிட திமுக ஆட்சிக்காலத்தில் கூடுதலாக வருவாய் ஈட்டுவதற்கு பதிவுத் துறையானது பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் கடந்த 4 ஆண்டுகளில் வணிகவரித் துறையும், பதிவுத் துறையும் சோ்ந்துமொத்தமாக ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன என்றாா் அவா்.