World Chess Championship : 'டிங் லிரன் Vs குகேஷ்' - சாதிப்பாரா தமிழக வீரர்? - மு...
பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவகாரம்: ஆவுடையாா்கோவில் வட்டாட்சியரகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் குறுவட்டத்தைச் சோ்ந்த 17 கிராம விவசாயிகளுக்கு 2023-ஆம் ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து ஆவுடையாா்கோவில் வட்டாட்சியரகத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏம்பல் குறுவட்டத்தில் கடந்த ஆண்டு சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிா் சாகுபடி செய்திருந்தனா். இந்நிலையில், கடந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் நெற்பயிா்கள் கருகி விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனா்.
ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதை வழங்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை மனு அளித்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், விவசாயிகள் சுமாா் 50 போ் ஆவுடையாா்கோவில் வட்டாட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீட்டுத் தொகை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.