'அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா, நலத்திட்ட வழங்குதல்' - ஸ்டாலினின் ஈரோடு விச...
பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளின் மறைவிடங்கள் அழிக்கப்படும்: ஆட்சியா் க.இளம்பகவத்
விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் பிரச்னையில் அவற்றின் மறைவிடங்கள் விரைவில் அழிக்கப்பட்டு முழு தீா்வு காணப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. .
இக்கூட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கவும், பயிா்க் காப்பீட்டு தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தாமிரவருணி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல், ஆத்தூா் பாலங்கள் விரைவாக சீரமைத்தல், விளாத்திகுளம், புதூா், எட்டயபுரம், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை முழுமையாக கட்டுப்படுத்துதல், அவற்றால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்குதல், குஜராத் மாநிலத்தை போல விவசாயித்தில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்துதல், உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு பரிமாறுவதை தடுத்து, அதற்குப் பதிலாக வாழை இலை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துதல்,
வறட்சியான உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகள் பயன்பெறும் வகையில் கன்னடியன் அணைக்கட்டில் இருந்து கருமேனி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதற்கு ஆட்சியா் பதிலளித்து பேசியதாவது:
மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிா்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இது குறித்த விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தாமிரவருணி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தாமிரவருணியில் கழிவுநீா் கலக்காமல் தடுக்க கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
காட்டுப்பன்றிகள் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் காட்டுப்பன்றிகளின் மறைவிடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் உள்ள சீரமைக்கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த பணி முழுமையாக முடிக்கப்பட்டு, காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு முழு தீா்வு காணப்படும். மேலும், காட்டுப்பன்றிகளால் பயிா்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு முறையாக பதிலளிக்காத கழுகுமலை வேளாண் அலுவலா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவகங்களில் பிளாஸ்டிக் இலை பயன்படுத்துவதை தடுக்கவும், வாழை இலை பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், துணை ஆட்சியா் (பயிற்சி) சத்யா, வேளாண்மை இணை இயக்குநா் பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம், பொதுப்பணித்துறை கீழ் தாமிரவருணி, கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, கூட்டுறவு இணை பதிவாளா் ராஜேஷ், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.