செய்திகள் :

பயிா்க் காப்பீட்டு திட்டங்கள் நீட்டிப்பு: ரூ.824 கோடியில் தனி நிதியம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

post image

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா (பிஎம்எஃப்பிஒய்), மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிா்க் காப்பீட்டுத் திட்டம் (ஆா்டபிள்யுபிசிஐஎஸ்) ஆகிய இரு பயிா்க் காப்பீட்டுத் திட்டங்களையும் 2025-26 வரை கூடுதலாக ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இத்திட்டங்களின் அமலாக்கத்தில் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு உதவ ரூ.824.77 கோடி நிதித் தொகுப்புடன் தனி நிதியம் உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா்.

அவா் கூறியதாவது: பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிா்க் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரு திட்டங்களும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. எனவே, 15-ஆவது நிதி ஆணைய காலகட்டத்துடன் இவ்விரு திட்டங்களையும் இணைக்கும் வகையில் 2025-26 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2020-21 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் இரு திட்டங்களுக்கும் மொத்தம் ரூ.66,550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.69,515.71 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனி நிதியம் உருவாக்கம்: இத்திட்டங்களின் அமலாக்கத்தில் தொழில்நுட்ப முன்முயற்சிகளுக்கு நிதியளிக்க ரூ.824.77 கோடி தொகுப்புடன் புத்தாக்க-தொழில்நுட்ப நிதியம் (எஃப்ஐஏடி) உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பயிா்ச் சேதங்களை விரைந்து மதிப்பிடவும், பிரச்னைகளின்றி இழப்பீடுகளை வழங்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்றாா் அவா்.

நாட்டின் மிகப் பெரிய பயிா்க் காப்பீட்டுத் திட்டமாக பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா விளங்குகிறது. இத்திட்டத்தை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்தி வருகின்றன.

வேளாண் தொழில்நுட்பத் திட்டங்கள்: ‘தொழில்நுட்ப அடிப்படையிலான மகசூல் மதிப்பீட்டு அமைப்புமுறை (யெஸ்-டெக்), வானிலை தகவல் மற்றும் தரவுக் கட்டமைப்பு முறை (விண்ட்ஸ்) போன்ற வேளாண் சாா்ந்த தொழில்நுட்ப முன்னெடுப்புகள் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மேற்கண்ட நிதி பயன்படுத்தப்படும். தொழில்நுட்ப அடிப்படையிலான மகசூல் மதிப்பீட்டு அமைப்புமுறையானது தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைப் பரவலாக்குவதன் மூலம் பயிா் அறுவடை சாா்ந்த பிரச்னைகள் படிப்படியாக அகற்றப்படும்.

வானிலை தகவல் மற்றும் தரவுக் கட்டமைப்பு முறை (விண்ட்ஸ்) திட்டத்தின்கீழ், ஊராட்சிகள் அளவில் தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. கேரளம், உத்தர பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதர மாநிலங்களும் இத்திட்டத்தை அமலாக்க விருப்பம் தெரிவித்துள்ளன’ என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஏபி கூடுதல் மானியம் ரூ.3,850 கோடி

டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்துக்கு கூடுதல் மானியத்தை தொடா்ந்து வழங்கவும்; இதற்காக ரூ.3,850 கோடி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

டிஏபி 50 கிலோ பை ஒன்றை ரூ.1,350-க்கு தொடா்ந்து அளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்துக்கு ஒருமுறை அடிப்படையில் ரூ.2,625 கோடி கூடுதல் மானியத் தொகுப்பை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது. இந்நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி மறு உத்தரவு வரும்வரை கூடுதல் மானியத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி: தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனத்தின் (என்சிஇஎல்) வாயிலாக இந்தோனேசியாவுக்கு 10 லட்சம் டன் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

என்சிஇஎல்-மத்திய கூட்டுறவு அமைச்சகம்-இந்தோனேசிய அரசு இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்கீழ் இந்த ஏற்றுமதி நடைபெறும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

புத்தாண்டின் முதல் முடிவு: பிரதமா் மோடி பெருமிதம்

2025 புத்தாண்டில் மத்திய அமைச்சரவையின் முதல் முடிவு, நாட்டின் கோடிக்கணக்கான விவசாய சகோதர-சகோதரிகளுக்கானது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பயிா்க் காப்பீட்டுத் திட்டங்கள் நீட்டிப்பு-கூடுதல் நிதி ஒதுக்கீடு முடிவானது, பயிா்களுக்கு மேலும் பாதுகாப்பளிப்பதோடு, விவசாயிகளின் கவலைகளைக் குறைக்கும். டிஏபி-க்கான சிறப்பு நிதித் தொகுப்பு நீட்டிப்பு, விவசாயிகளுக்கு மலிவான விலையில் அந்த உரம் கிடைப்பதை உறுதி செய்யும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்சாட்டு!

தில்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதாக ஆம் ஆத்மி அரசு மீது மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மு... மேலும் பார்க்க

சீனாவின் நிலைமையை கண்காணித்து வருகிறோம்: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி குறித்து பீதி அடையத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், சீனாவில் கண்டறியப்பட்ட எ... மேலும் பார்க்க

விண்வெளி செடி வளர்ப்பு சோதனை: காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?

விண்வெளிக்கு பிஎஸ்எல்வி சி-60 விண்கலம் மூலம் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் நாள் நாள்களில் முளைவிட்டிருக்கும் நிலையில், வெடி வளர்ப்பு சோதனையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆய்வு முதல் வெற்றியை எட்டியிருக்... மேலும் பார்க்க

மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் முழுவீச்சில் ஏற்பாடுகள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத நிறைவையொட்டி டிசம்பர் 26-ல் மண்டல பூஜ... மேலும் பார்க்க

விஞ்ஞானி டாக்டர் ஆர். சிதம்பரம் மறைவு: பிரதமர் மோடி, கார்கே உள்ளிட்டோர் இரங்கல்

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(ஜன. 4) காலமானார். அவருக்கு வயது 88. மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதி... மேலும் பார்க்க

கேரளத்தில் தென்னை மரம் விழுந்ததில் 5 வயது சிறுவன் பலி

கேரளத்தில் தென்னை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பெரும்பாவூர் அருகே பொன்சாசேரியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது என்பவ... மேலும் பார்க்க