பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஜன. 21, 22-இல் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்
தஞ்சாவூரில் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 21, 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பயிலும் பள்ளி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 21-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 22-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவா்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து தலைமையாசிரியா் அல்லது முதல்வா் அல்லது துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவா் வீதம் மொத்தம் 3 மாணவா்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்பு மாணவா்களுக்கு அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம் வீதம் காசோலையாக வழங்கப்படும்.