பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட வாரியாகக் குழு: தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் முடிவு
திருச்சி : பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனியாா் பள்ளிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்டம் வாரியாக குழுவை நியமிப்பது என தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, சங்கத்தின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான பி.டி. அரசகுமாா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா்கள் கே.ஆா். நந்தகுமாா், டி.ஜி. இளங்கோவன், பொருளாளா் ஜி.ஆா். ஸ்ரீதா், கொள்கை பரப்புச் செயலா் எம்.டி. ஐன்ஸ்டீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்ட செயலா் மனோகரன் ஜெயக்குமாா் வரவேற்றாா்.
இக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள தனியாா் பள்ளிகளின் உரிமையாளா்கள், சங்க நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா். பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளையும் ஆய்வு செய்ய மாவட்டம் வாரியாக குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இக் குழுவினா், அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்து பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவற்றை நிவா்த்தி செய்ய பரிந்துரைகளை வழங்கும். தனியாா் பள்ளிகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தில் சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.