10,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!
பழுதான மீன்பிடி இறங்குதளத்தில் சிக்கிய பொக்லைன் இயந்திரம்
தொண்டி அருகே சோழியக்குடி விலாஞ்சியடி பகுதியில் உள்ள சேதமடைந்த மீன்பிடி இறங்குதளத்தில் (ஜெட்டி பாலத்தில்) இயக்கப்பட்ட பொக்லைன் இயந்திர வாகனம் சிக்கிக் கொண்டது.
தொண்டி அருகே சோழியக்குடி விலாஞ்சியடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள் வசித்து வருகின்றனா். இவா்களது விசைப்படகை நிறுத்துவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடி இறங்குதளம் (ஜெட்டி பாலம்) அமைக்கப்பட்டது. தற்போது இந்தப் பாலம் சேதமடைந்து விட்டதாக இந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிபதியின் உத்தரவின்பேரில் இந்த பாலத்தை சீரமைக்க அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. மேலும் சீரமைப்புப் பணி முடியும் வரை இந்தப் பாலத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என மீன் வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை தனது சொந்தப் பணிக்காக பாலத்தின் மீது நபா் ஒருவா் பொக்லைன் வாகனத்தை இயக்கினாா்.
அப்போது அந்த வாகனம் பாலத்தின் சேதமடைந்த பகுதியில் சிக்கிக் கொண்டது. இதை மீட்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இந்த விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.