பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!
பவன் கல்யாணின் ‘ தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படத்தின் 1 மணி சிறப்புக் காட்சிக்கு ஆந்திர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகியப் படங்களை இயக்கிய சுஜித் இயக்கியுள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பவன் கல்யாண் துணை முதல்வரானார். இதனால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
பவன் கல்யாணுடன் பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.
பிரியங்கா மோகனின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.
அதன் பிறகு நடைபெறும் சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரவி கே.சந்திரன் மற்றும் ‘லியோ’ புகழ் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
And yes… it’s happening
— DVV Entertainment (@DVVMovies) September 17, 2025
The #OG of Box Office locks his arrival from 1:00 AM across Andhra Pradesh on Sep 25th. #TheyCallHimOGpic.twitter.com/c3OsTHljlz
பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக உள்ள 'தே கால் ஹிம் ஓஜி' திரைப்படத்தின் 1 மணி சிறப்புக் காட்சிக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், படத்தின் டிக்கெட் விலையாக ரூ.1000 வரை வசூலிக்கவும் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
படம் வெளியாகும் செப்.25 முதல் அக்டோபர் 4 வரை, அனைத்து வழக்கமான நிகழ்ச்சிகளுக்கும் விலையை அதிகரிக்க ஆந்திர மாநில அரசு அனுமதித்துள்ளது.
முதல் 10 நாள்களுக்கு சிறப்புக் காட்சி அல்லாத பிற காட்சிகளுக்கும் டிக்கெட்டை உயர்த்தி விற்கவும் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சிங்கில் ஸ்கிரீன் சினிமா டிக்கெட்டுகள் ரூ.125-க்கும், மல்டிபிளக்ஸ் டிக்கெட்டுகள் ரூ.150-க்கும் விற்கவும் அனுமதி அளித்துள்ளது.
சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்திருக்கும் நிலையில், அரசு என்பது டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டுமே தவிர, ஒரேடியாக ஏற்றக்கூடாது என எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன.