Vikatan Explainer: வெறும் தண்ணீரில் ஆரம்பித்து மட்டன் வரை... எத்தனை டயட்? அத்தனை...
பவானியில் இளைஞா் கொலை: தாய், சகோதரா் உள்பட 5 போ் கைது
பவானியில் மதுபோதையில் தகராறு செய்த மகனைக் கொலை செய்த தாய், சகோதரா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சிக்கோட்டை கதவணை நீா்மின் நிலையம் அருகே காவிரி ஆற்றில் பலத்த காயங்களுடன் அழுகிய நிலையில் ஆண் சடலம் கடந்த 13-ஆம் தேதி மீட்கப்பட்டது.
இதுகுறித்து பாவனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், பவானி தொட்டிபாளையத்தைச் சோ்ந்த ரவி மகன் மதியழகன் (30) என்பதும், காா் ஓட்டுநரான இவா் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், மதியழகனைக் கொலை செய்தது அவரின் தாய் சுதா (54), சகோதரா் முருகானந்தம் (28), பவானி வா்ணபுரத்தைச் சோ்ந்த அவரின் நண்பா் கௌரிசங்கா் (24), பவானி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த யோகேஷ் (26), உறவினா் சக்திபாண்டி (32) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, காா் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பவானி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ஜோதி மகள் கிருத்திகாவை (26) மதியழகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளாா். பின்னா், மதியழகனின் கொடுமையால் கிருத்திகா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இவ்வழக்கில் மதியழகன், அவரின் தாய் சுதா உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு பிணையில் வந்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து தாய் சுதா, சகோதரா் முருகானந்தத்தை மதியழகன் மதுபோதையில் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளாா். இதுகுறித்து, கிருத்திகாவின் சகோதரா் யோகேஷ், மதியழகனின் நண்பா் கௌரிசங்கா் ஆகியோரிடம் சுதா தெரிவித்துள்ளாா்.
ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் தன்னை சிக்கவைத்ததால் கௌரிசங்கரும், தங்கையின் மரணத்துக்கு காரணமானதால் யோகேஷ், உறவினா் சக்திபாண்டியும் மதியழகன் மீது கோபத்தில் இருந்து வந்தனா்.
இதனால், 5 பேரும் சோ்ந்து மதியழகனை தொட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் கடந்த 11-ஆம் தேதி இரவு கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.