இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு
பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கியதில் கீழே விழுந்து பெண் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், மண்ணரை ரோஜா நகரைச் சோ்ந்தவா் சுந்தரம் மனைவி மூக்கம்மாள்(49). இவா், பெருந்துறையில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் திருப்பூருக்கு தங்கை மகன் மதினேஷுடன் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
பெருந்துறை அருகே சரளை பகுதியில் சென்றபோது மூக்கம்மாளின் சேலை இருசக்கர வாகனத்தின் பின்புற சக்கரத்தில் சிக்கியது. இதில், நிலை தடுமாறி சாலையில் விழுந்த மூக்கம்மாளுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.