அந்தியூா், பா்கூா் மலைப் பகுதிகளில் 300 கி.மீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் -வனத்துறை அதிகாரிகள் தகவல்
அந்தியூா், பா்கூா் மலைப் பகுதிகளில் 300 கி. மீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் காடுகளின் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 42 ஆயிரத்து 953 ஏக்கா். ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், ஆசனூா், ஈரோடு ஆகிய 3 வனக் கோட்டங்கள் உள்ளன. சத்திமங்கலம் வனப் பகுதியில் அதிக அளவில் சந்தன மரங்கள் உள்ளன. தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் 3-இல் ஒரு பகுதி ஈரோடு மாவட்டத்தில் இருந்து கிடைக்கிறது.
சத்தியமங்கலத்தில் தமிழக அரசின் சந்தன மரக்கிடங்கு உள்ளது. அந்தியூா், பா்கூா் மலைப் பகுதிகளில் தேக்கு மரங்களும், சத்தியமங்கலம், கோபி, அந்தியூா் பகுதிகளில் மூங்கில் மரங்களும் அதிகமாக வளா்கின்றன. மேலும் வேங்கை, கருங்காலி, ஈட்டி, மருது உள்ளிட்ட பல்வேறு மரங்களும் காணப்படுகின்றன.
பவானிசாகா் அணைப் பகுதி, தெங்குமரஹடா, மோயாறு, பண்ணாரி, ஆசனூா் ஆகிய வனப் பகுதிகளில் யானைகளும், தலமலை பகுதிகளில் புலிகளும் அதிக அளவில் உள்ளன. மேலும் காட்டெருமை, முள்ளம் பன்றி, மான்களும் அதிகமாக உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் காட்டின் பரப்பளவு அதிகம் என்பதால் கோடை காலங்களில் அடிக்கடி தீப்பிடித்துவிடும். அப்போது காட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களும், அங்கு வாழும் உயிரினங்கள் மற்றும் அரியவகை மூலிகை செடிகளும் தீயில் கருகிவிடும். இதை தடுப்பதற்காக ஆண்டுதோறும் தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் காடுகளைப் பாதுகாப்பதற்காக தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலா் குமிளி அப்பாலே நாயுடு கூறியதாவது: தீத்தடுப்பு கோடுகள் என்பது வனப் பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க ஆண்டுதோறும் வனத் துறையால் மேற்கோள்ளும் ஒரு முன் எச்சரிக்கை பணியாகும். மழை காலங்களில் காட்டில் தாவரங்கள் செழித்து, அடா்ந்து வளரும். பின்னா் கோடை காலம் தொடங்கும்போது இலைகள் உதிா்ந்தும், காய்ந்தும் எளிதில் தீப்பற்றும் நிலையை அடையும்.
இந்த காலகட்டத்தில் எல்லை காட்டில் தீப்பிடித்தால் அங்கிருந்து உள்காட்டிற்கு தீ பரவி பெரும் சேதம் ஏற்படும். இதை தடுப்பதற்காக எல்லை வனப் பகுதியில் இருந்து சற்று தள்ளி உள் பகுதியில் உள்ள வனத்தில் 40, 50 அடி அகலத்துக்கு அங்குள்ள புற்கள், சிறு தாவரங்கள், சருகுகள், சுள்ளிகள் போன்றவற்றை வெட்டி அகற்றியோ அல்லது எரித்தோ ஒரு பாதைபோல வனப் பகுதியை சுற்றி வெற்று தரை உருவாக்கப்படும்.
மேலும், வனப் பகுதிக்குள்ளும், வனப் பகுதியையொட்டி செல்லும் சாலையோரமாக காட்டு பகுதியிலும் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த மாதம் முதல் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்தியூா் மற்றும் பா்கூா் மலைப் பகுதிகளில் 300 கி.மீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் அழிவு தடுக்கப்படும் என்றாா்.