பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ராகுல் காந்தி இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். நேற்று தனது சொந்த தொகுதியாக ரேபரேலியில் ஆய்வு மேற்கொண்ட அவர், இன்று அமேதி தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கான்பூர் சென்ற ராகுல் காந்தி, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவேதி என்பவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இன்றிரவு 7 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்து ராகுல் காந்தி பேசவுள்ளார்.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடுதிரும்பிய ராகுல் காந்தி காங்கிரஸ் செயற்க்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பின்னர், ஜம்மு - காஷ்மீருக்குச் சென்ற ராகுல் காந்தி தாக்குதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் உடன் நிற்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.