நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 4:1 என்ற விகிதத்தில் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பி.ஆர். கவாய், சஞ்சய் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகிய நான்கு நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இதன்படி, ஒரு நடுவர்மன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டப்பிரிவு 1996ஐப் பயன்படுத்தி நீதிமன்றங்கள் மாற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.
வணிக ரீதியிலான விவகாரங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கும் இது பொருந்தும்.
இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இது போன்ற நடுவர்மன்ற உத்தரவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, நீதிமன்றங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுபோல, சட்டப்பிரிவு 142-ஐப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நடுவர்மன்ற உத்தரவுகளில் மாற்றங்களை செய்யவும் வழிவகை உள்ளது. ஆனால், இந்த அதிகாரம் என்பது, மிகக் கவனத்துடன் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில், இந்த சட்டம் பற்றிய கேள்விக்கு பதிலாக, நடுவர்மன்ற உத்தரவுகளை மாற்றியமைக்க நீதிமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட அளவிலேயே அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது. நடுவர் மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டம் 1996ன் கீழ் உள்ள 34 மற்றும் 37 சட்டப்பிரிவுகளுக்கு இவை பொருந்தும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால், இதே அமர்வில் இடம்பெற்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன், நடுவர்மன்ற உத்தரவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று தனித்த உத்தரவை பிறப்பித்தார்.
அதிக நீதிபதிகள் அளித்த தீர்ப்பே இறுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, நடுவர் மன்றங்கள் பிறப்பித்த உத்தரவில் மாற்றங்களை மட்டும் செய்ய, வரையறுக்கப்பட்ட அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், நடுவர் மன்ற உத்தரவுகளில் இருக்கும் அச்சுப்பிழை, கணக்கீட்டுப் பிழைகள் போன்றவற்றை சரி செய்யும் வகையிலானதாக அந்த மாற்றங்கள் இருக்கலாம் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.